வயர்லெஸ் முறையில் மின்சாரம் - சீன விஞ்ஞானிகள் சாதனை
100 மீட்டர் தூரத்திற்கு வயர்லெஸ் முறையில் மின்சாரத்தை கடத்தி சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
சீனாவின் Sun Chasing திட்டம்
சோலார் தகடுகள் மூலம், சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் பெறும் தொழில்நுட்பம் பல்வேறு நாடுகளில் நடைமுறையில் இருந்தாலும், பகல் நேரங்களில் அதுவும் சூரிய ஒளி கிடைக்கும் போது மட்டுமே இதில் மின்சாரத்தை உருவாக்க முடியும்.

ஆனால், விண்வெளியில் சூரிய தகடுகளை வைத்தால், அங்கு பகல் இரவு போன்ற நேர சுழற்சி இல்லாததால் 24 மணி நேரமும் மின்சாரத்தை உருவாக்கி சேமித்து, கம்பியில்லா முறையில் விண்வெளி மற்றும் பூமியில் உள்ள சாதனங்களுக்கு அனுப்ப முடியும் என சீன விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இதனை அடிப்படியாக வைத்து, சிடியான் பல்கலைக்கழகப் பேராசிரியரான டுவான் பாயான் தலைமையிலான ஒரு ஆய்வுக் குழு, "சூரியனைத் துரத்துதல்" என்று பொருள்படும் "ஜூரி" திட்டத்தில் இயங்கி வருகிறது.
ஒரே நேரத்தில் பல நகரும் இலக்குகளுக்கு மின்சாரம் வழங்கக்கூடிய, கம்பியில்லா மின் பரிமாற்றத்திற்கான ஒரு தரை அடிப்படையிலான சோதனை அமைப்பை பல்கலைக்கழக வளாகத்தில் இந்த குழுவினர் உருவாக்கினர்.
தற்போது இந்த சோதனை அமைப்பில், 75 மீட்டர் உயரமுள்ள கோபுரத்தில் 4.8 மீட்டர் விட்டமுள்ள குவிமாட கண்ணாடி பொருத்தப்பட்டு, இந்த கண்ணாடி சூரிய ஒளியை ஒரு புள்ளியில் குவித்து, அதை மைக்ரோவேவ் அலைகளாக மாற்றியது.
பின்னர் அந்த மைக்ரோவேவ் அலைகள் 100 மீட்டர் தூரத்திற்கு வயர்லெஸ் முறையில் கடத்தப்பட்டு, மறுமுனையில் மீண்டும் மின்சாரமாக மாற்றப்பட்டது. இவ்வாறாக 1,180 வாட்ஸ் மின்சக்தியை 20.8 சதவீத செயல்திறனுடன் கடத்தி வெற்றிகரமாக சோதித்துள்ளனர்.
இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பாட்டிற்கு வந்தால், 24 மணி நேரமும் சூரியனிலிருந்து நிலையான, கார்பன் வெளியீடு இல்லாத மின்சாரத்தை பூமிக்கு கொண்டு வர முடியும்.
ஆனால் இந்த திட்டத்திற்கு கட்டமைப்பை உருவாக்குவதற்கான பாரிய செலவு, மைக்ரோவேவ் கதிர்வீச்சு பறவைகள் மற்றும் விமானங்களுக்கு ஏற்படுத்தக்கூடிய தாக்கம், தொழில்நுட்ப திறன், விண்வெளி சட்டங்கள் என பல்வேறு சவால்கள் உள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |