தைவானை வட்டமிட்ட 18 சீன அணு ஆயுத போர் விமானம்:போர் பதற்றத்தால் மக்கள் அச்சம்!
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தீவு நாடான தைவானின் பாதுகாப்பு எல்லைக்குள், 18 அணு ஆயுதப் போர் விமானங்களை சீனா அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனா-தைவான் உரசல்
சுயாட்சி தீவு நாடான தைவானில் கடந்த 2016ம் ஆண்டு ஜனாதிபதியாக சாய் இங்-வென் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து சீனா தைவான் இடையிலான உறவில் உரசல் அதிகரித்து வருகிறது.
இதற்கு, தைவான் சீனாவின் ஒற்றை அங்கம் என்ற பரப்புரைகளை ஜனாதிபதி சாய் இங்-வென் தொடர்ந்து மறுத்து வருவதும், தைவானை சுதந்திர சுயாட்சி நாடாக அறிவித்து வருவதுமே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
Ministry of National Defense of the People’s Republic of China
அத்துடன் தைவான் மீதான ராணுவ, இராஜதந்திர மற்றும் பொருளாதார அழுத்தங்களை சீனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தைவானில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தைவானிய உணவு, பானங்கள், மது மற்றும் மீன்பிடி பொருட்களுக்கு சீன அரசு தடை விதித்தது.
இதற்கு பதிலளித்த தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென், சீனாவின் இந்த தடை சர்வதேச வர்த்தக விதிகளை மீறும் செயல், மேலும் தீவு நாட்டின் மீதான “பாகுபாடு” என்று குற்றம்சாட்டினார்.
அணு ஆயுதப் போர் விமானம்
தைவான்-சீனா இடையிலான உரசல் கடந்த செப்டம்பர் மாதம் முதல் போர் பதற்றமாக மாறியுள்ளது, தைவான் மக்கள் சீன ஆக்கிரமிப்பு படையெடுப்பு குறித்து மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
அத்துடன் செப்டம்பர் மாதம் முதல் தைவான் பாதுகாப்பு எல்லைக்குள் நுழையும் சீன போர் விமானங்கள் மற்றும் கப்பல்கள் குறித்த தினசரி பாதுகாப்பு எச்சரிக்கை அறிக்கைகளை தைவான் பொதுமக்கள் மற்றும் சர்வதேச சமூகத்திற்கு தைவான் வெளியிட்டு வருகிறது.
Reuters
இந்நிலையில் சீன இதுவரை இல்லாத அளவுக்கு சுமார் 18 அணு ஆயுத H-6 ரக போர் விமானங்களை தைவானின் பாதுகாப்பு எல்லைக்குள் அத்துமீறி அனுப்பியுள்ளது.
H-6 என்பது சீனாவின் முக்கிய நீண்ட தூர குண்டு வீச்சு மற்றும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட போர் விமானம் ஆகும்.
இது குறித்து செவ்வாய்க்கிழமை காலை தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 21 விமானங்கள் தீவின் தென்மேற்கு வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தில் (ADIZ) நுழைந்தன, இதில் 18 அணுசக்தி திறன் கொண்ட H-6 குண்டுவீச்சு விமானங்களும் அடங்கும் என்று தெரிவித்துள்ளது.