முடிவுக்கு வந்த வர்த்தக போர் - வரியை குறைக்க ஒப்புக்கொண்ட அமெரிக்கா, சீனா
அமெரிக்கா மற்றும் சீனா பரஸ்பர வரியை குறைக்க முன்வந்துள்ளது.
அமெரிக்கா - சீனா வர்த்தக போர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த மாதம் உலக நாடுகள் மீது பரஸ்பர இறக்குமதி வரி விதிப்பை அமல்படுத்தினார். இதன் காரணமாக, சர்வதேச சந்தையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, ஏப்ரல் 9 ஆம் திகதி 90 நாட்களுக்கு வரிவிதிப்பை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.
ஆனால், சீனா மீதான வரி விதிப்பு உயர்த்துவதாக அறிவித்தார். அதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்கா மீதான வரியை உயர்த்தியது.
சீனப்பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 145% ஆக உயர்த்திய நிலையில் , அமெரிக்க பொருட்களுக்கான வரியை 125% ஆக சீனா அதிகரித்திருந்தது. இதன் காரணமாக, இரு நாடுகளுக்குமிடையே வர்த்தக போர் ஏற்பட்டது.
வரி குறைப்பு
இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், சுவிட்சர்லாந்தில் கடந்த 2 நாட்களாக, இரு நாட்டு உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில் இரு நாடுகளுக்குமிடையே உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், இரு நாடுகளும் பரஸ்பர வரியை 90 நாட்கள் நிறுத்தி வைக்க உள்ளதாக கூட்டாக அறிவித்துள்ளனர்.
இதன்படி, இருதரப்பிலும் 115% வரியைக் குறைக்க முன்வந்து, சீன பொருட்கள் மீதான வரியை, 145 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக குறைக்கவும், அமெரிக்கப் பொருட்கள் மீதான வரியை, 125% சதவீதத்திலிருந்து 10% ஆகக் குறைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் மற்றும் சீனாவின் துணை பிரதமர் ஹி லிஃபாங் தலைமையில், இரு நாட்டு பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் குறித்து தொடர்ந்து விவாதிக்க ஒரு செயல்முறை உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |