மார்பக அறுவை சிகிச்சை வீடியோவை வெளியிட்ட மருத்துவமனை: தனியுரிமை மீறப்பட்டதாக பெண் புகார்!
சீனாவில் அறுவை சிகிச்சையின் போது தன்னுடைய தனியுரிமை மீறப்பட்டு இருப்பதாக பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட தகவல் உரிமை மீறல்
சீனாவில், காவோ(Gao) என்ற பெயரில் அடையாளம் காணப்படும் பெண் ஒருவர், ஹெனான் மாகாணத்தில் உள்ள அழகியல் சிகிச்சை மருத்துவமனை மீது வழக்கு தொடர திட்டமிட்டுள்ளார்.
ஐந்து மாதங்களுக்கு முன்பு அவர் மேற்கொண்ட மார்பக விரிவாக்க அறுவை சிகிச்சையின் வீடியோ, சமூக வலைத்தளமான டூயினில் (சீனாவின் டிக்டாக்) அத்துமீறி வெளியிடப்பட்டுள்ளது.
மயக்க மருந்தினால் காவோ உணர்வற்று இருப்பதை காட்டும் அந்த வீடியோ காவோவின் தனியுரிமையை மீறியுள்ளதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 39,000 க்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளனர்.
மருத்துவமனை மறுப்பு
சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்திப்படி, மருத்துவமனை எந்தவித பொறுப்பையும் ஏற்க மறுப்பதால் காவோ கடும் கோபம் அடைந்துள்ளார்.
வீடியோவை எடுத்தது "வெளி நபர்" என்றும் தங்கள் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றும் மருத்துவமனை கூறியுள்ளது.
ஆனால், அறுவை சிகிச்சை அரங்கம் என்பது மிகவும் தனிப்பட்ட இடம், அங்கு பணியாளர்கள் மற்றும் நோயாளிகளின் வருகை மற்றும் வெளியேற்றம் ஆகியவை கண்காணிக்கப்படுகிறது.
அனுமதி இல்லாத நபர் இவ்வளவு நெருக்கமாக வீடியோ எடுக்க முடியாது என்று காவோ வாதிடுகிறார்.
மேலும், வீடியோவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தெளிவாகக் காணப்படுகிறார்கள். மூன்று மாதங்களுக்குப் பிறகு மருத்துவமனை சிசிடிவி காட்சிகளை நீக்குவது என்பது மருத்துவமனை குற்றவாளியை காப்பாற்ற முயற்சிக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
இதனால் மருத்துவமனையின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க காவோ முடிவு செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |