இரண்டு மீன்பிடி படகுகள்... சர்ச்சைக்குரிய தீவு: மோசமடையும் சீனா - ஜப்பான் பகை
கிழக்கு சீனக் கடலில் அரசியல் ரீதியாக சிக்கல் வாய்ந்த தீவுகளின் அருகில் நடந்த மோதல் குறித்து சீனாவும் ஜப்பானிய கடலோர காவல்படையினரும் வெவ்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இடைமறித்து விரட்டியதாக
ஜப்பானால் சென்காகு தீவுகள் என்று அழைக்கப்படும் டயோயு தீவுகளின் நீரில் ஜப்பானிய மீன்பிடி படகு ஒன்று சட்டவிரோதமாக நுழைந்ததாக சீனாவின் கடலோர காவல்படை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

குறித்த தீவுகள் ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், சீனா அவற்றைத் தங்கள் பிரதேசமாகக் கூறி வருகிறது. இந்த நிலையில், ஜப்பானின் மீன்பிடி படகை நெருங்கியபோது, இரண்டு சீன கடலோர காவல்படை கப்பல்களை இடைமறித்து விரட்டியதாக ஜப்பானின் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் ஜப்பான் பிரதமர் தகைச்சி தைவான் குறித்து பதிவு செய்த கருத்துக்கள் சீனாவை கோபம் கொள்ள வைத்ததை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் விழுந்து வரும் நிலையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
சீனா மற்றும் அதன் நடவடிக்கைகள் தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைப்பவர்களில் ஒருவரான சானே தகைச்சி, நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது, சீனா தைவானைத் தாக்கினால் தற்காப்புக்கு என ஜப்பான் இராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்றார்.

ஜப்பானும் சீனாவும்
ஜனநாயக முறைப்படி ஆளப்படும் தைவானை தங்கள் பகுதி என கூறிவரும் சீனா, தேவை என்றால் தைவானை மீட்க இராணுவ நடவடிக்கைக்கும் தயார் என கூறி வருகிறது.

ஜப்பானின் செங்காகு தீவுகளிலிருந்து தென்மேற்கே சுமார் 160 கி.மீ தொலைவில் தைவான் அமைந்துள்ளது. இரு நாடுகளையும் பிரிக்கும் நீர்வழிப்பாதையான கிழக்கு சீனக் கடலில் உள்ள வளங்களை கூட்டாக கையாள்வதற்கு ஜப்பானும் சீனாவும் 2008 ஆம் ஆண்டில் கொள்கை ரீதியான ஒப்பந்தத்தை மேற்கொண்ட போதிலும், கடந்த ஒன்றரை தசாப்தங்களாக பதட்டங்கள் அதிகரித்துள்ளன.
எவரும் குடியிருக்காத செங்காகு தீவுகள் இரு நாடுகளின் பதட்டங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |