கொரோனாவின் கோர பிடியில் எவரெஸ்ட் மலை சிகரம்: உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர்
எவரெஸ்ட் மலை சிகரத்தில் ஊழியர்கள் மற்றும் மலையேறும் வீரர்கள் பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தில் எவரெஸ்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள முகாம் ஒன்றில் 100 பேர்களுக்கு மேல் கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டு வருவதாக ஆஸ்திரியா நாட்டவரான மலையேறும் வீரர்களுக்கான வழிகாட்டி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், சுமார் 1,500 பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அந்த முகாமில் கொரோனா பரவலுக்கு வாய்ப்பில்லை என நேபாள நிர்வாகம் அழுத்தமாக தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, பொதுவாக மலையேறும் வீரர்களுக்கு ஏற்படும் சாதாரண அறிகுறிகளே காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஆஸ்திரியா நாட்டவரான Lukas Furtenbach தெரிவிக்கையில், நேபாளத்தில் அமைந்துள்ள அந்த முகாமில் 200 பேர்களுக்கு வரை கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்றார்.
இதனிடையே ஷெர்பா எனப்படும் உள்ளூர் மலையேறும் நிபுணர்கள் 77 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பருவத்தில் மட்டும் உலகெங்கிலும் உள்ள 408 மலையேறும் வீரர்களுக்கு எவரெஸ்ட் மலை சிகரத்தில் ஏற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு உதவியாக பல நூறு ஷெர்பா வீரர்களும் செல்வார்கள். இவர்கள் அனைவருக்குமான உதவியாளர்களும் இந்த குழுவில் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் தற்போது முகாம் ஒன்றில் உரிய அனுமதிக்காக ஏப்ரல் மாதத்தில் இருந்தே காத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
நேபாளத்திற்கு வந்து சேர்வதற்கு முன்னர் மலையேறும் வீரர்கள் கண்டிப்பாக கொரோனா சோதனை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது விதி.
ஆனால் இதில் 43 குழுக்கள் சோதனை மேற்கொள்ளவில்லை என்றே தெரிய வந்துள்ளது. கடந்த மாதம் ஹெலிகொப்டர் மூலம் முகாமுக்கு வந்து சேர்ந்த நோர்வே நாட்டவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து அவர் உடல்நிலை மோசமடைய, சொந்த நாட்டுக்கு அவர் திரும்பியுள்ளார் என்றே கூறப்படுகிறது.