வெள்ளம் பாதித்த தென் மாவட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரண நிதி வழங்கப்படும்- முதல்வர் ஸ்டாலின்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் தமிழக மக்களின் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணம் நிதி குறித்த தகவல்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வெள்ள பாதிப்பு
திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட தென் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18ம் திகதிகளில் அதிகனமழை பெய்தது. பல்வேறு இடங்களில் வெள்ளம் புகுந்து, பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகினர்.
குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் நகரங்கள் மற்றும் கிராமங்களில் மழைநீர் தேங்கியதால், பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
PTI
குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்ததால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். கிராமங்களில் பல வீடுகள், வெள்ளத்தில் மூழ்கி, முற்றிலும் இடிந்து நாசமானது.
இந்நிலையில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக முதல்வர்
இந்நிலையில் ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், ''சென்னை மக்களைப் போல தென் மாவட்ட மக்களையும் அரசு காக்கும் என உறுதி தருகிறேன்.
வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை விட பல மடங்கு அதிகனமழை தென் மாவட்டங்களில் பெய்துள்ளது. சில இடங்களில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்ததால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
1801-ம் ஆண்டிற்கு பிறகு தற்போது தான் அதிகளவு மழை பெய்துள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள் களத்தில் பணி செய்து வருகின்றனர். 12,653 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் உணவு, மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்க விமானப்படையிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது'' என்றார்.
நிவாரண நிதி
மேலும், ''வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும்.
தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும்.
பாதிக்கப்பட்ட விவசாய நிலம் ஹெக்டேருக்கு ரூ.17,000 வழங்கப்படும். பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மத்திய அரசு இதுவரை தென் மாவட்ட மழையை கடும் பேரிடராக அறிவிக்கவில்லை. தற்போது தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு அளித்துள்ளது தவணை தான், கூடுதல் நிதி அல்ல'' என்று தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |