பரபரக்கும் திமுக! ஜூலையில் காத்திருக்கும் சம்பவம்?
ஜூலை முதல் வாரத்தில், திமுக கட்சியினர் பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் சம்பவம் ஒன்று நடக்கப் போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மீண்டும் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதற்காக கருணாநிதி குடும்பம் பரபரப்பாக ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.
திமுக தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்த மு.க. அழகிரியை, மகன் என்றும் பாராமல், முன்னாள் முதல்வர் கருணாநிதி சில காரணங்களுக்காக கட்சியைவிட்டு வெளியேற்றினார். இதனால் திமுகவில் மிகப்பெரிய பிளவு ஏற்படுமென என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அழகிரி கட்சிக்கு எதிராக பேசுவதை மட்டுமே வழக்கமாக வைத்திருந்தார்.
கருணாநிதி மறைவுக்குப் பின் திமுகவுக்குள் நுழைய முயன்ற அழகிரி, இதற்காகவே தமது ஆதரவாளர்களை கூட்டி ஆலோசனை நடத்தி, சென்னையில் பேரணி எல்லாம் நடத்தினார்.
முயற்சிகள் கைகூடவில்லை என்றதும், ஒரு கட்டத்தில் தனிக் கட்சி, ரஜினிகாந்த் கட்சியுடன் கூட்டணி என்றெல்லாம் அரசியலில் பல வழிகளை தேடினார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்த நிலையில் அவரது ஒட்டுமொத்த அரசியல் நடவடிக்கைகளையும் நிறுத்தினார்.
இதையடுத்து, 2021 சட்டசபை தேர்தலில் திமுக வென்றபோது, முதல்வரான தம்பி ஸ்டாலினுக்கு அண்ணன் அழகிரி வாழ்த்து தெரிவித்தார். மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அழகிரி குடும்பம் பங்கேற்றது.
பின்னர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானபோது மதுரைக்குப் சென்று பெரியப்பாவான அழகிரியிடம் ஆசீர்வாதம் வாங்கினார். அப்போது உதயநிதி திமுகவுக்கு எப்போது திரும்புவீர்கள்? என கேட்க, திமுக தலைமைதான் முடிவு செய்யும் என அழகிரி கூறினார்.
சமீபத்தில், கருணாநிதி குடும்பத்தின் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பாக திருவாரூரில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டத்தை சகோதரி செல்வியுடன் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அழகிரியும் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் விரும்பியுள்ளார். இதற்காக அமெரிக்காவில் இருந்த அழகிரியை முதல்வர் ஸ்டாலின் தொடர்பு கொண்டு பேசியதாகவும், ஆனால் அச்சமயத்தில் அழகிரியால் வரமுறாமல் போனதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வரும் ஜூலை மாதத்தில் கருணாநிதி வீட்டில் ஒரு குடும்ப விசேஷ நிகழ்ச்சி நடைபெற இருக்கிறதாம். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினும் அழகிரியும் நேரில் சந்தித்து பேச உள்ளதாகவும், அப்போது லோக்சபா தேர்தல் தொடர்பாக சில விஷயங்களை இருவரும் ஆலோசிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த ஒரு நாளுக்காக கருணாநிதி குடும்பம் மட்டுமின்றி திமுகவினர் அனைவரும் பரபரப்புடன் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
DMK, MK Stalin, MK Alagiri, Karunanidhi Family
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |