86 வயது முதியவரை நேரில் அழைத்து பாராட்டிய தமிழக முதல்வர்: வியக்க வைத்த காரணம்
தமிழக மாவட்டம் மதுரையில் சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வரும் 86 வயது வியாபாரியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து கௌரவித்தார்.
லட்சக்கணக்கில் உதவி
மதுரை தத்தநேரியைச் சேர்ந்த வியாபாரி ராஜேந்திரன். 86 வயதாகும் இவர் 'திருப்பதி விலாஸ்' என்ற பெயரில் மிளகாய், வத்தல், வடகம் வியாபாரம் செய்து வருகிறார்.
விருதுநகரை பூர்வீகமாக கொண்ட இவரிடம் 40 பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். ராஜேந்திரன் செய்த வியக்க வைக்கும் செயல் தான் தமிழக முதல்வரே நேரில் அழைக்கும் அளவுக்கு உயர்த்தியுள்ளது.
சமூக நலப் பணிகளில் ஆர்வம் கொண்ட ராஜேந்திரன், மதுரை மாநகராட்சி திரு.வி.க மேல்நிலைப் பள்ளிக்கு 10 வகுப்பறைகள், இறைவணக்க கூட்ட அரங்கம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை அமைத்து தந்துள்ளார். இதற்கு ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது.
அத்துடன் கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஒரு ஆழ்துளை கிணறு, உணவு அருந்தும் இடம், கழிப்பறைகள் ஆகியவற்றையும் செய்து கொடுத்துள்ளார். இதற்கு 71 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவானதாக கூறப்படுகிறது.
மேலும், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் புது மண்டபத்தை புதுப்பிக்க 2 கோடி வழங்குவதாகவும் உறுதி அளித்துள்ளார்.
முதலமைச்சர் பாராட்டு
இந்த நிலையில் தான் மதுரைக்கு வருகை புரிந்த முதலமைச்சர் ஸ்டாலின், சமூக பணியாற்றி வரும் ராஜேந்திரனை நேரில் அழைத்து வாழ்த்துக்களை கூறினார்.
அத்துடன் அவருக்கு சால்வை அணிவித்து, அவருக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவச் சிலையை வழங்கி கௌரவப்படுத்தி பாராட்டினார்.
இந்த தகவல்களை முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |