கல்லூரி மாடியில் இருந்து குதித்த மாணவி! தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி
தமிழக மாவட்டம் விழுப்புரத்தில் தனியார் கல்லூரி மாணவி முதல் மாடியில் இருந்து குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் மாணவிகளின் தற்கொலை, தற்கொலை முயற்சிகள் தொடர் கதையாகியுள்ளது பெற்றோர் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம், மாநிலத்தையே உலுக்கிய நிலையில் திருவள்ளூரில் 17 வயது மாணவியொருவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இதேபோன்ற ஒரு சம்பவம் அடுத்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்துள்ளது. மணிநகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்.
இவரது மகள் ரம்யா தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். ரம்யா கல்லூரியின் முதல் மாடியில் இருந்து விழுந்திருக்கிறார். அதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், கல்லூரி நிர்வாகம் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளது.
மாணவி ரம்யாவுக்கு உடல்நலப்பிரச்சனை இருப்பதால் அவர் மாடியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்பட்டுள்ளது. எனினும், மாணவி சுயநினைவுக்கு வந்தால் தான் உண்மை தெரிய வரும் என்று கூறப்படுகிறது.