பிரித்தானியாவை அடுத்து... ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக முக்கியமான முடிவெடுத்த நாடு
கரீபியன் மற்றும் பசிபிக் கடலில் அமெரிக்காவின் குண்டுவீச்சு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ முக்கிய முடிவொன்றை அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி பெட்ரோ
போதைப்பொருள் நடமாட்டத்தை மொத்தமாக ஒழிக்கும் வகையில் கரீபியன் மற்றும் பசிபிக் பகுதியில் கடத்தல் படகுகள் மீது அமெரிக்கா குண்டு வீச்சு நடத்தி வருகிறது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையில் இதுவரை 76 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையிலேயே ஜனாதிபதி பெட்ரோ தமது சமூக ஊடகத்தில் இந்த விவகாரம் குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில், அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளுடனான தகவல் தொடர்புகள் மற்றும் பிற பரிமாற்றங்களை நிறுத்துமாறு பொது பாதுகாப்புப் படையின் உளவுத்துறை சேவைகளின் அனைத்து மட்டங்களிலும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், படகுகள் மீதான அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடரும் வரை இந்த இடைநீக்கம் அமுலில் இருக்கும் என்றும் பெட்ரோ குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று, தாங்கள் அளிக்கும் தகவல்கள் அமெரிக்கப் படைகளால் ஆபத்தான இராணுவத் தாக்குதல்களில் ஈடுபடப் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தைப் பதிவு செய்துள்ள பிரித்தானியாவும் உளவுத்தகவல்களை அமெரிக்காவுடன் பகிர்ந்துகொள்வதை நிறுத்தியுள்ளது.

பொதுவாகவே அமெரிக்காவுடன் மிக நெருக்கமான இராணுவ ஒத்துழைப்பைப் பேணிவரும் பிரித்தானியாவின் இந்த முடிவு அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
பிரித்தானியா நம்பவில்லை
மட்டுமின்றி, போதைப்பொருள் கடத்தலை முன்னெடுப்பதாக கூறப்படும் படகுகளைத் தாக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் சர்ச்சைக்குரிய நடைமுறை சட்டப்பூர்வமானது என்று பிரித்தானியா நம்பவில்லை என்பதையும் இது குறிப்பதாக தெரிவிக்கின்றனர்.

கரீபியனில் உள்ள பல தீவுப் பிரதேசங்களை பிரித்தானியா மேற்பார்வையிட்டு வருகிறது. இதனால், லத்தீன் அமெரிக்காவிலிருந்து பயணிக்கும் சந்தேகத்திற்கிடமான படகுகளின் நடமாட்டம் குறித்து அமெரிக்காவுடன் நீண்டகாலமாக உளவுத்துறை தகவல்களைப் பகிர்ந்து வருகிறது.
இதன் காரணமாக அமெரிக்காவின் கடலோரக்காவல் தொடர்புடையப் படகுகளைப் பறிமுதல் செய்தும் வந்துள்ளது. ஆனால், செப்டம்பர் மாதம் தொடங்கி அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபடத்தொடங்கியதில் இருந்து பிரித்தானியா தகவல் எதையும் அமெரிக்காவிடம் பகிர்ந்துகொள்வதில்லை என தெரிய வந்துள்ளது.

கரீபியன் மற்றும் பசிபிக் பகுதிகளில் சிறிய படகுகள் மீது அமெரிக்கா நடத்திய 19 தாக்குதல்களில் 76 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |