தமிழகத்தை உலுக்கிய சம்பவம்! ரஜினிகாந்துக்கு கடும் கண்டனம்
ஆதாரமில்லாமல் கருத்து தெரிவிக்க கூடாது என நடிகர் ரஜினிகாந்துக்கு விசாரணை ஆணையம் அறிவுறுத்தல்
தூத்துக்குடியில் சமூக விரோதிகள் புகுந்ததால் கலவரம் ஏற்பட்டதாக கூறிய நடிகர் ரஜினிகாந்த்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் வெளியான அறிக்கையில், ரஜினிகாந்த் போன்ற பிரபலங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மாவட்டம் தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டு, ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி முற்றுகை போராட்டம் நடந்தபோது தடியடி நடத்திய பொலிஸார், அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியபோது, போராட்டம் நடக்கும் இடத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாகவும், இதன் காரணமாகவே கலவரம் ஏற்பட்டதாகவும் கூறி இருந்தார்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த விசாரணையின் முடிவில் மொத்தம் 3000 பக்கங்கள் கொண்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதில், 'சமூக விரோதிகளால் தான் கலவரம் உண்டானது என்று தான் கூறியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என ரஜினி கூறினார். நடிகர் ரஜினிகாந்த் சூழ்நிலைகளால் உணர்ச்சிவசப்பட்டுச் செயல்படுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர் ஒரு விடயத்தைச் சொல்லும் போது பொதுமக்கள் அதைக் கூர்ந்து கவனிப்பார்கள். எனவே, அவர் தான் கூறும் தகவலை உறுதி செய்ய வேண்டும்.
சமூகத்தில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் கருத்து ஒன்றை அவர் கூறியுள்ளார். அப்படியிருக்கும் போது தகவல்களை அவர் முன்னரே சரிபார்ப்பது நல்லது. பிரபலங்கள் கூறும் கருத்துகள் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் வாய்ப்பு உள்ளது. அவை, இருக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க உதவாது. மாறாக அதிகமான பிரச்சனைகளே உருவாக்கும்.
பிரபலங்கள் நிதானத்துடனும், பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும். ஆதாரம் இல்லாத கருத்துகளைக் கூறுவதை பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.