தனி பெரும்பான்மை இல்லை! பாஜக ஆட்சியமைக்க கூட்டணி கட்சிகள் விதித்த 3 நிபந்தனைகள்
மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சியமைப்பதற்கு கூட்டணி கட்சிகள் சில நிபந்தனைகள் விதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியில் பாஜக?
மத்தியில் ஆட்சியை பிடிப்பதற்கு 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
உத்தர பிரதேசம், மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றி அடைந்ததால் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதோடு மேற்கு வங்காளத்திலும் எதிர்பார்த்த அளவுக்கு பாஜகவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
இந்நிலையில், மத்தியில் பாஜக ஆட்சியமைப்பதற்கு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இதில், தெலுங்கு தேசம் 16 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 12 தொகுதிகளிலும் வென்றுள்ளது. இந்த ஆதரவுடன் 3 -வது முறையாக மத்தியில் ஆட்சியமைக்க முனைப்பு காட்டி வருகிறது பாஜக.
என்னென்ன நிபந்தனைகள்?
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் பாஜக ஆட்சியமைக்க சில நிபந்தனைகள் விதிப்பதாக கூறப்படுகிறது.
முதலாவதாக, இரு மாநிலங்களும் சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் நிலையில், இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்க நிபந்தனைகளாக விதித்து வருவதாக கூறப்படுகிறது.
இரண்டாவதாக, இரு கட்சிகளும் மக்களவை சபாநாயகர் பதவி தங்களுக்கு வேண்டும் என்று பாஜகவிடம் கூறியுள்ளதாக பேசப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தற்போது மக்களவையில் எந்த கட்சிக்குமே பெரும்பான்மை இல்லை என்பதால் கூட்டணி ஆட்சியே நடைபெறவுள்ளது. கடந்த இரு முறையும் சபாநாயகர் பதவியை தங்கள் பாஜக வசமே வைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக, சில முக்கிய அமைச்சரவை இலாகாகளையும் கேட்டு நிபந்தனைகள் விதிப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் நிபந்தனைகள் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |