பலமுறை சொல்லியும் கேட்கவில்லை! ஐடி ஊழியர் கவினை கொன்றது ஏன்? இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்
தன் சகோதரியுடன் பழகாதே எனக் கூறியதை கேட்காததால் கவின்குமாரை கொலை செய்ததாக இளைஞர் சுர்ஜித் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதிர்ச்சி சம்பவம்
தமிழக மாவட்ட திருநெல்வேலியில் கவின்குமார் என்ற ஐ.டி ஊழியர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரை கொன்ற இளைஞர் சுர்ஜித் பொலிசாரிடம் சரணடைந்தார்.
அவரது தந்தை சரவணன் மணிமுத்தாறு பட்டாலியனில் துணை காவல் ஆய்வாளராகவும், தாய் கிருஷ்ணகுமாரி ராஜபாளையம் பட்டாலியனில் துணை காவல் ஆய்வாளராகவும் பணியாற்றி வருகின்றனர் என்பது பின்னர் தெரிய வந்தது.
இந்நிலையில் சுர்ஜித் பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், "நானும் எனது மூத்த சகோதரியும் தூத்துக்குடியில் படித்தபோது, கவின்குமாரும் அதே பள்ளியில் படித்தார். அப்போது அவர் எங்களுடன் நட்பாக பழகினார்.
அந்த பழக்கம் பள்ளி முடிந்து கல்லூரிக்குச் சென்ற பின்னரும் தொடர்ந்தது. அந்த நட்பே இருவருக்கும் இடையே காதலாக மாறியது. அவர்களது காதலுக்கு எங்கள் வீட்டில் எதிர்ப்பு வந்த போதிலும் காதலிப்பதை நிறுத்தவில்லை.
நாங்கள் பலமுறை கவின்குமாரிடம் பேசியும், அவர் என் சகோதரியுடன் பழகுவதை நிறுத்தவில்லை. எனது சகோதரி சித்த மருத்துவராக உள்ளார். அவர் எங்கள் வீட்டுக்கு அருகே உள்ள ஒரு சித்த மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார்.
அவரைப் பார்ப்பதற்காகவே சென்னையில் பணியாற்றிய போதிலும் கவின்குமார் அடிக்கடி வரத் தொடங்கினார். அதை நாங்கள் கண்டித்ததால், தனது உறவினர்களுக்கு வைத்தியம் பார்ப்பது போன்று அந்த மருத்துவமனைக்கு வந்து எனது சகோதரியுடன் பேசிக் கொண்டிருப்பார்.
இது தொடர்பாக எனது சகோதரரிடம் பலமுறை எடுத்துச் சொல்லியும் அவரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரத்தில் இருந்த நிலையில், நேற்று கவின் குமார் தனது தாத்தாவுடன் சித்த மருத்துவமனைக்கு வந்து, எனது சகோதரியுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கேள்விப்பட்டேன்.
அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அரிவாளை மறைத்து எடுத்துச் சென்று அவர் சாலையில் வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அவர் வந்ததும் அரிவாளால் வெட்டினேன். அதை எதிர்பார்க்காத கவின் குமார் ஓடத் தொடங்கினார்.
ஆனால், நான் விடாமல் விரட்டிச் சென்று அவரை வெட்டிச் சாய்த்தேன்.
அவர் உயிரிழந்துவிட்டார் என்பதை அறிந்த பிறகே அந்த இடத்தில் இருந்து சென்றேன். நான் செய்த தவறுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பதற்காக,நானே காவல்நிலையம் சென்று சரணடைந்தேன்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |