நீட் தேர்வு கட்டாயமல்ல.. ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உரிமைத்தொகை! காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், பாஜக, அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டன.
அந்தவகையில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் உருவாக்கப்பட்டது. இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
முக்கிய அம்சங்கள்
* நாடு முழுவதும் பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
* NEET, CUET போன்ற தேர்வுகள் மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம்.
* மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
* தேசிய கல்விக் கொள்கை மாநில அரசுகளின் ஆலோசனைக்கு பின்பு நடைமுறைப்படுத்தப்படும்.
* ST, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும்.
* ரயில்களில் முதியவர்களுக்கு ரத்து செய்யப்பட்ட கட்டண சலுகை மீண்டும் அமல்படுத்தப்படும்.
* புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
* மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் எனப்படும் 100 நாள் வேலைக்கான சம்பளம் ரூ.400 என்று உயர்த்தப்படும்.
* ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க நடவடிக்கை
* நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை கொண்டுவரப்படாது.
* மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கான பென்சன் தொகை ரூ.1000 ஆக அதிகரிக்கப்படும்.
* பாஜகவில் சேர்ந்து குற்ற வழக்கில் இருந்து தப்பித்தவர்கள் மீண்டும் விசாரிக்கப்படுவார்கள்.
* ஏழைகளுக்கான மருத்துவக் காப்பீடு ரூ.25 லட்சமாக அதிகரிக்கப்படும்.
* இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்பேத்கர் நூலகங்கள் அமைக்கப்படும்.
* சிறு குறு தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட்டு, சராசரி கல்வித் தகுதி/திறன் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித்தர வழிவகை செய்யப்படும்
* அனைத்து நிறுவனங்களும் மகளிருக்கு ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பை கட்டாயம் வழங்க வேண்டும்
* BRAILLE எழுத்துமுறை மற்றும் சைகை மொழிக்கு 'மொழி அங்கீகாரம்' அளிக்கப்படும்.
* மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
* மீனவர்களின் மீன்பிடி விசைப்படகுகளுக்கான டீசல் மானியம் மீண்டும் வழங்கப்படும்.
* முப்படைகளின் ஆட் சேர்க்கையில் அக்னிபாத் முறை ரத்து செய்யப்பட்டு, வழக்கமான முறையே பின்பற்றப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |