தொடரும் ராணுவ அட்டூழியம்... தஞ்சமடைந்த ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றிய நாடு: 500 ஐ தாண்டிய இறப்பு எண்ணிக்கை
மியான்மரின் ஆளும் ராணுவ ஆட்சிக்குழுவுக்கு பயந்து நாட்டைவிட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கானோரை அண்டை நாடான தாய்லாந்து தடுத்து நிறுத்தியுள்ளது.
மியான்மரின் தென்கிழக்கில் ஆளும் ராணுவ ஆட்சிக்குழு நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில், சுமார் 2,000 மக்கள் அண்டை நாடான தாய்லாந்தின் எல்லையில் அமைந்துள்ள வனப்பகுதியில் தஞ்சமடைந்துள்ளனர்.
அவர்களை தாய்லாந்து அரசு கட்டாயப்படுத்தி, மீண்டும் மியான்மருக்கு அனுப்பி வைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியாகியுள்ளது.
இதனிடையே, மியான்மரின் இராணுவ விமானங்கள் இன ஆயுதக் குழுவால் கட்டுப்படுத்தப்பட்ட கிராமங்கள் மீது வான் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கானோர் குடியிருப்பை இழந்து, அண்டை நாடான தாய்லாந்துக்கு தஞ்சமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. அண்டை நாடான தாய்லாந்திற்கு மக்கள் தப்பிச் செல்வதாகக் கூறப்படுவது மியான்மருக்கு இது ஒரு புதிய நெருக்கடியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இதுவரை சிறார்கள், இளைஞர்கள் உட்பட மியான்மர் ராணுவத்தால் 510 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
புதிதாக வான் தாக்குதல்களிலும் மியான்மர் ராணுவம் ஈடுபட்டுள்ளதால் 10,000 மக்கள் தங்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுவரை 3,000 மக்கள் தாய்லாந்துக்கு தப்பிவிட்டதாக தெரிய வந்துள்ள நிலையில், 2,000 பேர்கள் திருப்பி அனுப்பப்படும் கட்டாயத்தில் உள்ளனர் என தெரிய வந்துள்ளது.
