கொரோனா இந்த விலங்குகளிடமிருந்து தான் மனிதனுக்கு பரவியிருக்கும்! வைரஸின் தோற்றம் குறித்து ஆராயும் WHO நிபுணர்கள் முக்கிய தகவல்
சீனாவின் வுஹான் சந்தையில் விற்கப்பட்ட ferret badgers மற்றும் முயல்களிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவியிருக்கக்கூடும் என்று வைரஸின் தோற்றம் குறித்து ஆராயும் உலக சுகாதார அமைப்பு (WHO) நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா தோற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ள சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட WHO நிபுணர் குழு, கடந்த வாரம் நான்கு வார பயணத்தை முடித்தது.
பத்திரிகையாளர் சந்திப்பில், ஆய்வகத்திலிருந்து வைரஸ் கசியவில்லை என்று WHO நிபுணர் குழு அறிவித்தனர், அதே நேரத்தில் வுஹான் சந்தையில் இருந்து பரவியிருக்குமோ என்பது தெளிவாக தெரியவில்லை என குறிப்பிட்டனர்.
வெளவால்களால் சந்தையில் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்றும், வௌவால்களிடமிருந்து வேறொரு விலங்கிற்கு பரவி, அதனிடமிருந்து மனிதனுக்கு பரவியிருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் சந்தேகித்தனர்.
இந்நிலையில், வுஹான் சந்தையில் விற்கப்பட்ட ferret badgers மற்றும் முயல்களிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவியிருக்கக்கூடும் என்று WHO நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக அமெரிக்காவின் The Wall Street செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், ferret badgers, முயல்கள் மற்றும் பிற விலங்குகளை சந்தைக்கு சப்ளை செய்தவர்கள் குறித்து மேலும் விசாரிக்க வேண்டியதன் அவசியத்தை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தையில் சட்டபூர்வமாக அல்லது சட்டவிரோதமாக விற்கப்படும் உயிருடன் மற்றும் இறந்த விலங்குகளின் முழு பட்டியலை கண்டறியும் பணியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனராம்.