இருமல் மருந்தால் கொத்தாக இறந்த சிறார்கள்: வெளிநாட்டில் இந்தியர் உட்பட பலருக்கு கிடைத்த தண்டனை
இருமல் மருந்து காரணமாக 68 சிறார்கள் மரணமடைந்த விவகாரத்தில் தொடர்புடைய 23 பேர்களுக்கு உஸ்பெகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இருமல் மருந்து காரணமாக
மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானில் 2022 மற்றும் 2023 க்கு இடையில் குறைந்தது 86 குழந்தைகள் இருமல் மருந்து காரணமாக பாதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 68 பேர் இறந்ததாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், Doc-1 Max என்ற இருமல் மருந்தை இறக்குமதி செய்த நிறுவனத்தின் தலைவரும் இந்தியருமான சிங் ராகவேந்திர பிரதாப் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் மீது பதியப்பட்ட ஊழல், வரி ஏய்ப்பு மற்றும் போலி ஆவண முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Doc-1 Max இருமல் மருந்தை ஆய்வுக்கு உட்படுத்தியதில், தொழில்துறை கரைப்பான்களாகப் பயன்படுத்தப்படும் நச்சுப் பொருட்களான diethylene glycol அல்லது ethylene glycol கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
தலா 80,000 டொலர் இழப்பீடு
இதில் சிறு அளவு கூட உயிருக்கு ஆபத்தானவை என்றே கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய Marion Biotech என்ற நிறுவனத்தின் உற்பத்தி உரிமத்தை இந்தியா ரத்து செய்திருந்தது.
மரணமடைந்த 68 குழந்தைகளின் குடும்பத்தினருக்கும் தலா 80,000 டொலர் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதே காலகட்டத்தில், காம்பியாவில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மற்றொரு இருமல் மருந்து காரணமாக, கடுமையான சிறுநீரக செயலிழப்பால் குறைந்தது 70 குழந்தைகள் இறந்தனர்.
இந்தோனேசியாவில், இதேபோன்ற மற்றொரு இருமல் மருந்தால் 2022 மற்றும் 2023 க்கு இடையில் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகளின் மரணத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள் |