இறுகும் கட்டுப்பாடுகள்... 5 பிரதான பிராந்தியங்களை மொத்தமாக முடக்கிய நாடு
இத்தாலியில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து 5 பிரதான பிராந்தியங்களில் அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இத்தாலியில் உருமாற்றம் கண்ட புதிய வீரியம் மிக்க கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது.
இதனால், மொத்தமுள்ள 20 பிராந்தியங்களில் 5-ல் சனிக்கிழமை முதல் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது இத்தாலி அரசாங்கம்.
உருமாற்றம் கண்ட புதிய வீரியம் மிகுந்த கொரோனா பரவல் தொடர்பில் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்ததன் பின்னரே, இத்தாலி நிர்வாகம் துரித நடவடிக்கையில் இறங்கியது.
இத்தாலி முழுவதும் நான்கு அடுக்குகளாக பிரித்து, பாதிப்பின் தன்மையை கருத்தில் கொண்டு நான்கு வண்ணங்களில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி மாத இறுதியில் இருந்து முதல்முறையாக, பசிலிக்காடா மற்றும் மோலிஸ் ஆகிய இரண்டு பகுதிகள் கடுமையான சிவப்பு மண்டலத்திற்குள் வந்துள்ளன.
இதனால் மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்கள் மூடப்படும், மக்கள் நடமாட்டம் கடுமையாக கட்டுப்படுத்தப்படும் மற்றும் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்தும் மூடப்படும்.
லோம்பார்டி, பீட்மாண்ட் மற்றும் மத்திய கடலோரப் பகுதியான மார்ச்சே ஆகிய மூன்று பகுதிகள் மஞ்சள் நிறத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலங்களுக்கு நகர்ந்துள்ளன.
மொத்தத்தில், இத்தாலியில் உள்ள 20 பிராந்தியங்களில் இரண்டு கடுமையான சிவப்பு மண்டலத்திலும், 9 பிராந்தியங்கள் ஆரஞ்சு மண்டலத்திலும், 8 பிராந்தியங்கள் மஞ்சள் மற்றும் ஒரு பிராந்தியம் வெள்ளை மண்டலத்திலும் கொண்டுவரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
திங்கள் முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது என இத்தாலி நிர்வாகம் அறிவித்துள்ளது.