அமெரிக்க தம்பதியருக்கு பிறந்த ஆசியக் குழந்தை: பெற்றோர் எடுத்துள்ள முக்கிய முடிவு
அமெரிக்காவில் வாழும் ஒரு வெள்ளையின தம்பதியருக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகளாக குழந்தையில்லாததால் செயற்கை கருத்தரித்தல் முறையில் குழந்தை பெற்றுக்கொண்டார்கள்.
குழந்தை பிறந்தபோது, குழந்தையைக் கண்ட அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.
அதிர்ச்சியில் உறைந்த தம்பதியர்
டிஃபனி, ஸ்டீவன் (Tiffany Score and Steven Mills) தம்பதியருக்கு ஐந்து ஆண்டுகளாக குழந்தையில்லை.

ஆகவே, செயற்கைக் கருத்தரித்தல் முறையில் கருவுற்ற டிஃபனி, டிசம்பர் மாதம் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்.
குழந்தை பிறந்தபோது, அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அது ஒரு வெள்ளையினக் குழந்தை இல்லை. அது ஒரு தெற்காசியக் குழந்தை!
அத்துடன், DNA சோதனையிலும், அந்தக் குழந்தையின் உடலில் அவர்கள் இருவருடைய DNAவும் இல்லை என்பதும் தெரியவந்தது.
விடயம் என்னவென்றால், இப்போது Shea என பெயரிடப்பட்டுள்ள அந்தக் குழந்தை அவர்களுடன் நன்றாக ஒட்டிக்கொண்டுவிட்டாள்.

அவர்களும் அவளை தங்கள் சொந்தக் குழந்தையாக கண்ணும் கருத்துமாக, அன்பும் பாசமுமாக வளர்த்துவருகிறார்கள்.
ஆனாலும், அவளுடைய உண்மையான பெற்றோர் அவளைத் தேடிக்கொண்டிருக்கலாம், ஒருவேளை அவர்கள் குழந்தையை தங்களிடமிருந்து பிரித்துவிடலாம் என்ற கவலை தம்பதியருக்கு இருந்தது.
சமீபத்திய தகவல்
இந்நிலையில், அந்தக் குழந்தையின் உண்மையான பெற்றோரை கண்டுபிடித்துவிட்டார்கள் டிஃபனி, ஸ்டீவன் தம்பதியர்.
அத்துடன், அந்த தம்பதியருடன் பேசி, Sheaவை வளர்ப்பது தொடர்பில் ஒரு முடிவுக்கும் வந்துவிட்டார்கள் அவர்கள்.
அதாவது, டிஃபனி, ஸ்டீவன் தம்பதியர்தான் Sheaவின் நிரந்தர பராமரிப்பு பெற்றோர் (permanent custodial parents of their daughter) என்பதை உறுதி செய்யும் வகையில் நீதிபதி ஒருவர் முன்னிலையில் இருதரப்புக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று செய்துகொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், Sheaவின் உண்மையான பெற்றோர் குறித்த விவரங்களை ரகசியமாகவே வைத்திருக்கப்போவதாகவும் டிஃபனி, ஸ்டீவன் தம்பதியர் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கிடையில், தங்கள் கருமுட்டைகளை மாற்றிய செயற்கை கருத்தரித்தல் நிலையம் மீது டிஃபனி, ஸ்டீவன் தம்பதியர் வழக்குத் தொடர்ந்திருந்தாலும், இப்போதைக்கு எங்களுக்கு இருப்பது கோபம் அல்ல என்கிறார்கள் அவர்கள்.
ஆம், இப்போது எங்களுக்கு மகிழ்ச்சியும் நன்றியுணர்வும்தான் மேலோங்கியுள்ளது என்று கூறும் அவர்கள், எங்களுக்கு ஒரு அழகான, ஆரோக்கியமான மகள் கிடைத்துள்ளாள் என்னும் நன்றியுணர்வே எங்களுக்கு உள்ளது என்கிறார்கள்.
அவளை கைகளில் ஏந்திக்கொள்ளவும், முத்தமிடவும், நேசிக்கவும் எங்களுக்குக் கிடைத்த வாய்ப்புக்காக எங்களுக்கு நன்றியுணர்வே மேலோங்கியுள்ளது என்கிறார்கள் அவர்கள்.
எங்கள் சொந்தப் பிள்ளையை நாங்கள் எப்படி நேசிப்போமோ, Shea மீது நாங்கள் காட்டும் அன்பும் அதே அளவில்தான் இருக்கும், அதில் எந்தக் குறைவும் இருக்காது என்கிறார்கள் டிஃபனி, ஸ்டீவன் தம்பதியர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |