குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்கள் ஆகி விடலாம் என ஆசைப்பட்ட தம்பதி தற்கொலை! எச்சரிக்கை செய்தி
சீக்கிரம் கோடீஸ்வரர்கள் ஆகலாம் என நினைத்த தம்பதி தற்கொலை.
நண்பர்கல் ஏமாற்றியதால் எடுத்த விபரீத முடிவு.
தமிழகத்தில் மளிகை கடைக்காரர் மனைவியுடன் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான அதிர்ச்சி காரணம் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சிவகுமார் (47) மளிகை கடை வைத்திருந்தார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (44). தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
சிவகுமார் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்களில் முதலீடு செய்து வந்ததாக தெரிகிறது. மேலும் ரூ.2 கோடி அளவிலான தொகை ஏமாற்றப்பட்டதாகவும், இதனால் கடன் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்தும், மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் தம்பதி மனஉளைச்சலுக்கு ஆளாகி சோகத்துடன் காணப்பட்டனர். இந்த நிலையில், திங்கள்கிழமை காலையில் சிவகுமாரும், ஜெயலட்சுமியும் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்ததைப் பார்த்து மளிகை கடை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவலறிந்த பொலிசார் சடலங்களைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலம் கிடந்த அறையில் சோதனையிட்டபோது அங்கிருந்து சிவகுமார் எழுதியதாக ஒரு கடிதத்தைக் காவல்துறையினர் கைப்பற்றினர்.
அந்தக் கடிதத்தில், ''பிஸினஸ் செய்வதற்காக நான் கடனாக வாங்கிய 2 கோடி ரூபாயை மற்றவர்களுக்கு கொடுத்து ஏமாந்து விட்டேன். அதனால் என்னால் கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்களுக்கு என்னால் பதிலும் சொல்ல முடியவில்லை. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு, நான் தற்கொலை செய்து கொள்கிறேன்,'' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
தொடர் விசாரணையில், சிவகுமாரிடம் சிலர் ரியல் எஸ்டேட் தொழில் செய்தால் குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாகி விடலாம் என ஆசை வலை விரித்துள்ளனர். இதை நம்பி கனவில் அவர் மிதந்தார். இதையடுத்து நெருக்கமான சிலர் சிவகுமாரிடம் இருந்து நிலம் வாங்குவதற்காக சிறிது சிறிதாக பணம் வாங்கிச் சென்றுள்ளனர். இதற்காக சிவகுமாரும் பலரிடம் 2 கோடி ரூபாய் வரை கடன் வாங்கிக் கொடுத்தது தெரியவந்தது.
சம்பவம் தொடர்பில் பொலிசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.