எரிமலை வெடிப்பு, சுனாமி... அடுத்த துயரம்: மொத்தமாக முடக்கப்படும் டோங்கா தீவு
எரிமலை வெடிப்பு, தொடர்ந்து சக்தி வாய்ந்த சுனாமி என மொத்தமாக சிதைந்து போயுள்ள டோங்கா தீவில் தற்போது முதன்முறையாக கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
டோங்கா தீவுப் பகுதி எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமி பாதிப்புகளில் இருந்து மெதுவாக மீண்டுவரும் நிலையில், தற்போது தலைநகர் Nuku'alofa-வில் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அண்மையில் எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமியைத் தொடர்ந்து மனிதாபிமான உதவிகள் பெறப்பட்டுவரும் துறைமுகப்பகுதியில் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் சியாவோசி சோவலேனி தெரிவித்துள்ளார்.
இதுவரை உலக நாடுகளில் கொரோனா பரவல் பல கோடி மக்களை பலி வாங்கியுள்ள நிலையில், தென் பசிபிக் நாடான டோங்காவில் கொரோனா உறுதி செய்யப்படுவது இதுவே முதல்முறை.
இதனையடுத்து, செவ்வாய்க்கிழமை பகல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர் சியாவோசி சோவலேனி, புதன்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி முதல் ஊரடங்கு அமுலுக்கு வருவதாகவும், ஒவ்வொரு 48 மணி நேரத்திற்கும் ஒருமுறை நிலைமைகளை கருத்தில்கொண்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
படகு போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும், உள்ளூர் விமான சேவையும் ரத்து செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட தீவு மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ முன்வந்துள்ள அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து குழுவினரால் கொரோனா பரவல் ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தற்போதைய சூழலில் உதவிகள் தேவை எனவும், ஆனால் சுகாதார விதிகளுக்கு உட்பட்டு தொடர்பற்ற சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், டோங்கா தீவுக்குச் சென்ற அவுஸ்திரேலியா நிவாரணக் கப்பலில் கொரோனா பரவல் கண்டறியப்பட்டதாகவும், 600 பணியாளர்களில் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
ஆனால், கொரோனா பரவல் கண்டறியப்பட்டும், குறித்த கப்பல் துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதிக்கப்பட்டது. அந்த கப்பலில் பணியாற்றிய ஊழியர்களுக்கா தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது என்பதை பிரதமர் சியாவோசி சோவலேனி குறிப்பிடவில்லை.
106,000 மக்கள் தொகை கொண்ட டோங்கா தீவில் சுமார் 60% மக்கள் இரு தடுப்பூசி டோஸ்களையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.