இஸ்ரேல் பிரதமரின் மனைவிக்கு எதிராக குற்றவியல் விசாரணை துவக்கம்: விரிவான பின்னணி
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மனைவி சாரா நெதன்யாகு மீது இஸ்ரேலிய பொலிசார் குற்றவியல் விசாரணையை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கணவரின் ஊழல்
குறித்த தகவலை அரசு சட்டத்தரணி அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை கடிதமூடாக பகிரங்கப்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொலைக்காட்சி செய்தி விசாரணை ஒளிபரப்பப்பட்ட பின்னர், சாரா நெதன்யாகு தனது கணவரின் ஊழல் விசாரணையில் தலையிடுவதாக குற்றம் சாட்டிய இஸ்ரேலிய எதிர்க்கட்சி உறுப்பினருக்கு கடிதத்தில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய உறுப்பினர் அந்த கடிதத்தை சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டு, பொதுமக்களுக்கு அம்பலப்படுத்தியுள்ளார். இஸ்ரேல் செய்தி ஊடகமான Channel 12-ன் Uvda என்ற நிகழ்ச்சியிலேயே பெஞ்சமின் நெதன்யாகுவின் ஊழல் தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
அதில், தனது கணவரின் ஊழல் வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த ஒருவரை மிரட்ட சாரா நெதன்யாகு முயன்றார் என்று குற்றஞ்சாட்டியுள்ளனர். மட்டுமின்றி, அரசு தரப்பு சட்டத்தரணி,
அவரது துணைத் தலைவர் மற்றும் அவரது கணவருக்கு விரோதமாகக் கருதப்படும் பிற நபர்களைத் துன்புறுத்துவதற்காக சாரா ஆர்ப்பாட்டங்களையும் ஏற்பாடு செய்தார் என்றும் அந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளனர், சாரா மீதான விசாரணை துவக்கப்பட்டுள்ளதை அரசு சட்டத்தரணிகள் அலுவலகம் உறுதி செய்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம், பெஞ்சமின் நெதன்யாகு ஊழல் விசாரணையில் சாட்சியமளித்தார், அதில் அவர் மூன்று தனித்தனி வழக்குகளில் லஞ்சம், மோசடி மற்றும் பொது நம்பிக்கையை மீறிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
விசாரணைக்கு பயந்து
ஆனால் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் கேலிக்குரியது என்றே நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். நெதன்யாகு மீதான இந்த ஊழல் வழக்கு மே 2020 இல் முதன்முதலில் தொடங்கியதிலிருந்து பல முறை தாமதமாகி, தற்போது இந்த விசாரணை, பல மாதங்கள் நீடிக்கும் என்றே கூறப்படுகிறது.
அத்துடன் காஸா மற்றும் லெபனான் போர்களின் அடிப்படையில் விசாரணை நடவடிக்கைகளை தாமதப்படுத்த பல கோரிக்கைகளை தாக்கல் செய்த நெதன்யாகு, எந்த தவறும் செய்யவில்லை என்று உறுதியாக மறுத்து வருகிறார்.
ஊழல் விசாரணைக்கு பயந்து, காஸா போரை முன்னெடுத்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் நெதன்யாகு மீது முன்வைக்கப்படுகிறது.
அரசியல் ஆதாயம் அளிப்பதாக கூறி கோடீஸ்வரர் ஒருவரிடம் இருந்து நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சுமார் 260,000 டொலர் மதிப்பிலான ஆடம்பரப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
மட்டுமின்றி, இஸ்ரேல் அரசியல் வரலாற்றில் குற்றவியல் விசாரணையை எதிர்கொள்ளும் முதல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |