புடினின் போர் குறித்து விமர்சனம்... உலகின் தலைசிறந்த பாலே நடனக் கலைஞர் மர்ம மரணம்
உக்ரைனில் விளாடிமிர் புடினின் போரை வெளிப்படையாக விமர்சித்த, ரஷ்யாவின் முன்னணி பாலே நட்சத்திரங்களில் ஒருவர் மர்மமாக மரணமடைந்துள்ளார்.
விபத்தில் சிக்கியதால்
உலகின் தலைசிறந்த பாலே நடனக் கலைஞர்களில் ஒருவராகக் கருதப்பட்ட 39 வயது Vladimir Shklyarov என்பவரே மர்மமான முறையில் விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளார்.
நியூயார்க், லண்டன் உள்ளிட்ட மிகப் பிரபலமான அரங்குகளில் நிகழ்ச்சிகள் முன்னெடுத்துள்ள இவர், ஜேர்மனியில் அடிக்கடி நிகழ்ச்சிகள் நடத்தியும் வந்துள்ளார். மட்டுமின்றி, ரஷ்ய ஜனாதிபதி புடினின் மருமகனுக்கு மிகவும் நெருக்கமான கலைஞர் இவர்.
ரஷ்ய விசாரணை அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், அவர் விபத்தில் சிக்கியதால் மரணமடைந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள தனது குடியிருப்பு கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இரண்டு பால்கனிகளுக்கு இடையில் குதிக்க முயன்ற நிலையிலேயே அவர் விபத்தில் சிக்கியதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வெளிப்படையாக விமர்சித்தவர்
இருப்பினும், விசாரணை அதிகாரிகளால் இது உறுதி செய்யப்படவில்லை. மட்டுமின்றி போதை மருந்துக்கு அடிமையான அவரை முன்னாள் மனைவி அறைக்குள் பூட்டி வைத்திருந்தார் என்றும், அங்கிருந்து தப்பிக்கும் நிலையில், விபத்தில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.
போதை மருந்து மற்றும் மதுவுக்கு அடிமையான அவர், பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
2022ல் புடின் முன்னெடுத்த உக்ரைன் போரினை வெளிப்படையாக விமர்சித்தவர்களில் Vladimir Shklyarov ஒருவர் என கூறுகின்றனர். சமூக ஊடக பக்கத்தில், போருக்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் பதிவு செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |