சென்னையில் ஏர் டாக்சி, நீர் மெட்ரோ, டிராம் சேவை - அடுத்த 25 ஆண்டுக்கான திட்டம்
சென்னையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான பொதுப்போக்குவரத்து திட்டத்தை CUMTA வழங்கியுள்ளது.
அடுத்த 25 ஆண்டுகளில் சென்னை போக்குவரத்து
கல்வி, தொழில், வேலைநிமித்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நாளுக்கு நாள் சென்னைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சென்னையில், மாநகர பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என பல்வேறு பொதுப்போக்குவரத்து பயன்பாட்டில் இருந்தாலும், போக்குவரத்து நெரிசல் முக்கிய பிரச்சினையாக உள்ளது.
போக்குவரத்தை நெரிசலை குறைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்ட ஆணையம்(CUMTA) பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, அடுத்த 25 ஆண்டிற்குள் சென்னையில் பொதுபோக்குவரத்து எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பரிந்துரைகளை தமிழ்நாடு அரசுக்கு வழங்கியுள்ளது.
மணிக்கு 240 கி.மீ வேகத்தில் ஏர் டாக்சி
இதன்படி, சென்னையில் 346 புதிய பேருந்து நிறுத்தங்கள் மற்றும் 30 புதிய பேருந்து டிப்போக்கள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் - அடையாறு, பெருங்களத்தூர் - மாதவரம் ( புறவழிச்சாலை வழியாக) இடையே புதிய மெட்ரோ வழித்தடம் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு - பூந்தமல்லி, பல்லாவரம் - குன்றத்தூர், வண்டலூர் - கேளம்பாக்கம் ஆகிய வழித்தடங்களில் நியோ மெட்ரோ சேவை அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எண்ணூர் - சிங்கப்பெருமாள் கோயில், ஸ்ரீபெரும்புதூர் - காஞ்சிபுரம் இடையே புதிய புறநகர் ரயில் சேவை அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தி.நகர் - நுங்கம்பாக்கம் - நந்தனம் - கலங்கரை விளக்கம் இடையே டிராம் சேவை அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சென்ட்ரலில் இருந்து, பக்கிங்ஹாம் கால்வாய், கோவளம் வழியாக மாமல்லபுரம் வரை, இரு கட்டங்களாக 55 கி.மீ நீளத்திற்கு நீர்வழி மெட்ரோ நீர்வழி மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகம் - பரந்தூர் - மாமல்லபுரம் - திருப்பதியை மையமாக வைத்து மணிக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ஏர் டாக்சி சேவை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2048 ஆம் ஆண்டுக்குள் பேருந்துப் பயணிகளின் தினசரி எண்ணிக்கை 39 லட்சத்திலிருந்து 65 லட்சமாக உயரும் என்றும், புறநகர் ரயில் பயணிகளின் எண்ணிக்கை 3 மடங்கிற்கும் மேலாக 35 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மெட்ரோ நெட்வொர்க் 400 கி.மீ. ஆக விரிவுபடுத்தப்படும். மெட்ரோ பயன்பாடு ஒரு நாளைக்கு 3.2 லட்சத்திலிருந்து 45 லட்சமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்ரோ விரிவாக்கம், பேருந்து நவீனமயமாக்கல், கடைசி மைல் இணைப்பு, டிஜிட்டல் நிர்வாகம் மற்றும் பாதசாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் நகர்ப்புற வடிவமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த அடுத்த 25 ஆண்டுகளில் ரூ.2.27 லட்சம் கோடி பெரும் முதலீடு தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |