காபூலில் புர்கா அணிந்து தப்பிய பிரித்தானிய கமாண்டோக்கள்... வாகனங்களில் தாலிபான் கொடி
தாலிபான்களின் கண்காணிப்பில் இருந்து தப்ப, பிரித்தானிய SAS கமாண்டோக்கள் புர்கா அணிந்து துணிச்சலாக ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
காபூல் நகரில் இருந்து வெளியேறும் கடைசி கட்டத்தில் பிரித்தானிய SAS கமாண்டோக்கள் புர்கா அணிந்து பெண்கள் வேடத்தில் விமான நிலையம் வந்து சேர்ந்துள்ளனர்.
ஆப்கன் பெண்கள், குடியிருப்பை விட்டு வெளியே செல்லும் போது உடல் முழுவதும் மறைக்க பயன்படுத்தப்படும் ஆடையை அணிந்து பிரித்தானிய கமாண்டோக்கள் பல கி.மீ தொலை பயணித்துள்ளனர்.
ஆப்கன் பாதுகாப்பு படைகளுடன் இணைந்து செயல்பட்ட பிரித்தானிய SAS கமாண்டோக்களே இறுதி கட்டத்தில் தாலிபான்கள் கண்ணில் இருந்து தப்ப, இந்த விசித்திர முடிவை எடுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமைந்திருந்த பிரித்தானிய துருப்புகளுக்கான பகுதியில் இருந்து 20 பேர்கள் கொண்ட SAS கமாண்டோக்கள் வாடகை டாக்ஸியில் காபூல் விமான நிலையம் சென்றுள்ளனர்.
20 SAS கமாண்டோக்களும் புர்கா அணிந்திருந்ததுடன், டாக்ஸியில் தாலிபான்களுக்கான கொடியும் ஏற்பாடு செய்திருந்தனர். காபூல் விமான நிலையம் சென்று சேரும் வரையில் தாலிபான்களின் பல எண்ணிக்கையிலான சோதனைச்சாவடிகளை கடந்துள்ளனர்.
கமாண்டோக்களை பாதுகாப்பாக மீட்டுவர அப்போதைய சூழலில் ஹெலிகொப்டர் வசதிக்கு வாய்ப்பில்லை என்ற தகவல் கிடைத்ததும் சாலை ஊடாக வேடம் மாறி பயணிக்க முடிவு செய்துள்ளனர்.
SAS கமாண்டோக்கள் ஆப்கானிஸ்தானின் முக்கிய பகுதிகளில் பல மாதங்களாக ரகசிய கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனால் ஆப்கானிஸ்தானில் நிலைமை கைமீறிச் செல்வதை உணர்ந்த பிரித்தானிய ராணுவ தலைமை, SAS கமாண்டோக்களை காபூல் நகருக்கு திரும்ப கேட்டிருந்தது.
அதேவேளை தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் முக்கிய மாநிலங்கள் பலவற்றையும் கைப்பற்றியதுடன், தலைநகருக்கு படைகளை திருப்பி இருந்தனர். இதனிடையே காபூல் வந்து சேர பல நூறு கி.மீ தொலைவு பயணித்த SAS கமாண்டோக்கள், 5 டாக்ஸிகளை பயன்படுத்தியுள்லனர்.
பாதுகாப்பான பாதையை தெரிவு செய்ய, ஆப்கன் பயங்கரவாத எதிர்ப்பு பொலிசாரின் உதவியையும் நாடியிருந்தனர். SAS கமாண்டோக்கள் தங்களுக்கான பாதுகாப்பு ஆயுதங்கள் தவிர்த்து, மொத்த கருவிகளையும் கைவிட்டு, காபூல் விமான நிலையம் நோக்கி பயணித்ததாக கூறப்படுகிரது.
SAS கமாண்டோக்கள் டாக்சியில் பயணிக்கும் வழிகளில் தாலிபான் ஆதரவு மக்கள் கொடிகளுடன் காபூலுக்கு விரைவதை காண நேர்ந்ததாக கூறப்படுகிறது.