தெருவெங்கும் சடலங்கள்... தீக்கிரையான வாகனங்கள்: ஒரு நாடே ஸ்தம்பித்த கலவரம்
கொத்தாக பல அப்பாவி மக்கள் கொல்லப்பட, வன்முறை சம்பவங்களுக்கு மேலும் வாய்ப்பிருப்பதாக அச்சம்
மருத்துவமனைகள், மருத்துவ மையங்கள் மீது தாக்குதல், ஆம்புலன்ஸ் சேவைகள் குடிமக்களை மீட்க தடை
லிபியாவில் போராளி குழுக்களுக்கும் அரசு படைகளுக்கும் இடையே வெடித்த கலவரத்தில் கொத்தாக பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும், வன்முறை சம்பவங்களுக்கு மேலும் வாய்ப்பிருப்பதாகவும் அச்சம் எழுந்துள்ளது.
திரிபோலி நகரை தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தை ஆதரிக்கும் ஆயுதமேந்திய போராளிகளும், பிரதமர் ஃபாத்தி பாஷாகாவுக்கு விசுவாசமான படைகளும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.
@reuters
வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய இந்த கலவரமானது சனிக்கிழமை பகல் வரையில் நீடித்ததாகவும், இதுவரையில் 23 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், பல டசின் மக்கள் காயங்களுடன் தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, கலவரப் பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கும், காயமடைந்தவர்களுக்கு உதவ பாதுகாப்பான பாதையை வழங்குவதற்கும் ஒரு போர்நிறுத்தத்திற்கு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
கொல்லப்பட்டவர்களில் முஸ்தபா பராக்கா என்ற பிரபல நகைச்சுவை நடிகரும் ஒருவர் என கூறப்படுகிறது. போராளிகளின் செயல்கள், ஊழல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் காணொளிகளை பதிவு செய்து வந்துள்ளார் முஸ்தபா பராக்கா.
@reuters
மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மீட்கப்பட்ட முஸ்தபா பராக்கா சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 140 பேர் காயமடைந்துள்ளதாகவும், 64 குடும்பங்கள் கலவரப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், தலைநகரில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்கள் மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது,
மட்டுமின்றி ஆம்புலன்ஸ் சேவைகள் குடிமக்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது, இது போர்க்குற்றங்கள் ஆகும் எனவும் தெரிவித்துள்ளது.