கொரோனாவை விட உலகில் இதனால் இறப்பவர்கள்தான் அதிகம்: அதிர்ச்சியளிக்கும் அறிக்கை
உலகில் கொரோனோவால் உயிரிழப்பவர்களைவிட பசியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறது தொண்டு நிறுவனம் ஒன்றின் அறிக்கை. Oxfam என்னும் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த அதிரவைக்கும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஒரு நிமிடத்திற்கு ஏழு. அதுவே, பசியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு 11 என்கிறது அந்த அறிக்கை. உலகம் முழுவதிலும், 155 மில்லியன் மக்கள் தங்களுக்கு உணவு கிடைக்கும் என்ற நிச்சயத்தன்மை இன்றி வாழ்வதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு, இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 20 மில்லியன் அதிகம் என்கிறது.
இதில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள், தங்கள் நாட்டில் நிலவும் இராணுவ பிரச்சினைகள் காரணமாக பசியால் வாடுவதாக தெரியவந்துள்ளது.
ஆனாலும், கொரோனா காலகட்டத்திலும் கூட, உலகம் முழுவதிலும் மக்களுக்கு உணவுக்காக செலவிடப்படும் தொகையை விட இராணுவத்துக்காக செலவிடப்படும் தொகை ஆறு மடங்கு அதிகம் என்கிறது அந்த அமைப்பு.
அதுவும், முந்தைய ஆண்டை விட, கடந்த ஆண்டு அந்த தொகை 36 மில்லியன் பவுண்டுகள் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, ஆப்கானிஸ்தான், தெற்கு சூடான், சிரியா மற்றும் ஏமன் நாடுகள்தான், மிக மோசமாக பசியால் மக்கள் வாடும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.