காஸா இறப்பு எண்ணிக்கை... முதல் 9 மாதங்களில்: நடுங்கவைக்கும் புதிய ஆய்வறிக்கை
இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை, போர் தொடங்கி முதல் 9 மாதங்களில் பதிவானதை விட 40 சதவிகிதம் அதிகம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
40 சதவிகிதம் அதிகம்
இஸ்ரேல்-ஹமாஸ் போரின் முதல் ஒன்பது மாதங்களில் காஸாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பான ஆய்வறிக்கையை தி லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ளது.
இதில் பாலஸ்தீன நிர்வாகம் பதிவு செய்துள்ள எண்ணிக்கையைவிட 40 சதவிகிதம் இறப்பு அதிகமாக நடந்துள்ளதாக நடுங்கவைக்கும் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதுவரை, இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை மிகைப்படுத்தப்படுவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
2023 அக்டோபர் மாத்ம் 7ம் திகதி தொடங்கி, 2024 ஜூன் 30ம் திகதி வரையில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 37,877 என்றே காஸா சுகாதாரத்துறை பதிவு செய்துள்ளது.
ஆனால் தற்போது லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது 55,298 முதல் 78,525 வரையில் இருக்கலாம் என்றே உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, போர் தொடங்கி முதல் 9 மாதங்களில் 64,260 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளது உறுதி என்றே லான்செட் மருத்துவ இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
உண்மையில் பல்வேறு காரணங்களால் 41 சதவித இறப்பு காஸா சுகாதாரத்துறையால் பதிவு செய்யப்படவில்லை. இந்த எண்ணிக்கையானது போர் தொடங்குவதற்கு முன்பான காஸா மக்கள்தொகையில் 2.9 சதவிகிதம் என்றே கூறப்படுகிறது.
பிரித்தானியாவை சேர்ந்த லான்செட் குழுமம் முன்னெடுத்த ஆய்வில், கொல்லப்பட்டவர்களில் 59 சதவீதம் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நம்பகத்தன்மை இல்லை
இந்த எண்ணிக்கையானது போரினால் கொல்லப்பட்டவர்கள் மட்டுமே என்றும், சிகிச்சை பலனளிக்காமல் அல்லது உணவுப் பற்றாக்குறையால் ஏற்பட்ட இறப்புகள் அல்லது இடிபாடுகளுக்குள் புதைந்ததாகக் கருதப்படும் ஆயிரக்கணக்கான காணாமல் போனவர்களின் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை என்றும் லான்செட் குழுமம் விளக்கமளித்துள்ளது.
வியாழக்கிழமை, காஸாவின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 15 மாத காலப் போரில் 46,006 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் படைகள் முன்னெடுத்த துப்பாக்கிச் சூடில் 1,208 பேர்கள் கொல்லப்பட்டதாகவே நெதன்யாகு அரசாங்கம் உறுதி செய்திருந்தது.
மட்டுமின்றி, போரினால் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்பில் காஸாவின் சுகாதார அமைச்சகம் மீது எப்போதும் சந்தேகத்துடனே இஸ்ரேல் கேள்வி எழுப்பி வந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்பில் சந்தேகம் தெரிவித்திருந்தார். ஆனால் பாலஸ்தீன மக்களின் இறப்பு எண்ணிக்கை நம்பகமானவை என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |