விஜய்யின் தவெகவில் இணையும் செங்கோட்டையன்? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
விஜய்யின் தவெகவில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைய உள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீக்கப்பட்ட செங்கோட்டையன்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு இருந்து வந்தது.

அதிமுகவில் இருந்து விலகி சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டுமென செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தார்.
இதன் காரணமாக செங்கோட்டையனின் அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்தார்.
கடந்த மாதம் நடைபெற்ற தேவர் ஜெயந்தி நிகழ்வில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார். கட்சியை ஒருங்கிணைப்பது தொடர்பாக விவாதிப்பதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, செங்கோட்டையைனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
தவெகவில் செங்கோட்டையன்?
இந்த நிலையில், செங்கோட்டையன் வரும் 27 ஆம் திகதி விஜய்யின் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 30 ஆம் திகதி, செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபிச்செட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டம் நடத்த உள்ள நிலையில், அதற்கு முன்னர் தனது அரசியல் நிலைப்பாட்டை செங்கோட்டையன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
9 முறை சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்ற தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன், ஒரு தேர்தலை கூட சந்திக்காத தவெகவில் இணைவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |