12 மணி நேர சென்னை பயணம் இனி 2:20 மணி நேரத்தில் - புல்லட் ரயில் திட்டத்தில் முன்னேற்றம்
சென்னை - ஹைதராபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டத்திற்கான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் ரயில்வே வழங்கியுள்ளது.
புல்லட் ரயில்
இந்தியாவில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயிலை செயல்படுத்த மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

இதில் முதற்கட்டமாக, மும்பை மற்றும் அகமதாபாத் இடையே 2029 ஆம் ஆண்டில் புல்லட் ரயிலை சேவையை தொடங்கும் வகையில், கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதே போல், நாட்டின் பல்வேறு நகரங்களையும் புல்லட் ரயில் மூலம் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
சென்னை - ஹைதராபாத் புல்லட் ரயில்
அதன் ஒரு பகுதியாக சென்னை மற்றும் ஹைதராபாத் இடையே 778 கி.மீ தூரத்திற்கு புல்லட் ரயில் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தெற்கு ரயில்வே துறை தமிழக அரசிடம் வழங்கியுள்ளது.
இந்த அறிக்கையை ஆய்வு செய்த பின்னர், ஒரு மாத காலத்திற்குள் இதற்கான ஒப்புதலை தமிழக அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசு ஒப்புதல் அளித்த பின்னர், இதற்கான இடங்களை இறுதி செய்து, கையகப்படுத்தும் பணிகளை தொடங்கும் என கூறப்படுகிறது.
முன்னதாக இந்த வழித்தடம் கூடூர் வழியாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசின் வேண்டுகோளின்படி, திருப்பதி வழியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்த புல்லட் ரயில் பயன்பாட்டிற்கு வந்தால், தற்போது 12 மணி நேரமாக உள்ள பயண நேரம் 2 மணி நேரம் 20 நிமிடங்களாக குறையும் என கூறப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் மற்றும் மீஞ்சூர் அருகே சென்னை ரிங் ரோட்டில் என தமிழ்நாட்டில் 2 நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு நிலையத்தை சுற்றியும், 50 ஏக்கர் நிலத்தை ரயில்வே கோரியுள்ளது. தமிழ்நாட்டின் உள்ளே 61 கி.மீ அமைய உள்ள இந்த வழித்தடத்தில், 11.6 கி.மீ சுரங்கபாதையாக உள்ளது.
இந்தப் பாதைக்கு 223.44 ஹெக்டேர் நிலம் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் வனப்பகுதிகள் எதுவும் இல்லாததால், சுற்றுசூழல் அனுமதி எளிதாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |