அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்... வளர்ப்பு பூனைகள் தின்று தீர்த்த கொடூரம்
ஸ்பெயின் நாட்டில் வளர்ப்பு பூனைகள் பாதி தின்ற நிலையில் வயதான பெண்மணி ஒருவரின் அழுகிய சடலம் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
மாட்ரிட் நகரில் அமைந்துள்ள குறித்த பெண்மணியின் குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் புகார் அளித்ததை அடுத்து கடந்த திங்கட்கிழமை பொலிசார் விசாரிக்க சென்றுள்ளனர்.
இந்த நிலையிலேயே கொலம்பிய நாட்டவரான 79 வயது Clara Ines Tobon என்பவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 1996ல் இருந்தே அவர் அந்த குடியிருப்பில் தனித்து வாழ்ந்து வந்தாக கூறப்படுகிறது.
அவருடன் 7 பூனைகளும் வாழ்ந்து வந்துள்ளது. அதில் ஐந்து பூனைகள் அவரது சடலத்தை பாதி தின்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் அவர் இறந்திருக்கலாம் என்றே பொலிசார் தெரிவிக்கின்றனர். இதுவரையான தங்களின் பொலிஸ் வாழ்க்கையில் இவ்வாறான கொடூர காட்சி தாங்கள் கண்டதில்லை என விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அவரது இறப்பு கொரோனா காரணமாக நடந்துள்ளதா என்பது தொடர்பிலும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகிறது. கடந்த ஓராண்டாகவே அவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார், அக்கம் பக்கத்தினர் பலர் தற்போது கொரோனா தொடர்பில் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
பொதுவாக பழங்கள் வாங்க அவர் உள்ளூர் சந்தையில் அடிக்கடி சென்று வருபவர் எனவும், நாள் தோறும் தெரு நாய்களுக்கு அவர் உணவளித்து வந்துள்ளதையும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில் பல வாரங்களாக அவர் குடியிருப்புக்கு வெளியே காணப்படதாக நிலையில் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்துள்ளனர்.
அவரது குடியிருப்பில் குப்பைகள் குவித்து வைத்திருந்ததையும், ஐந்து பூனைகள் இறந்த நிலையிலும் காணப்பட்டுள்ளது.
இறந்த பெண்மணிக்கு ஸ்பெயின் நாட்டில் உறவினர் எவரும் இல்லை என்றே விசாரணையில் தெரிய வந்துள்ளது.