பொது எதிரி அவர்கள் தான்... தாலிபான்கள்- ஐ.எஸ் கோராசன் இரகசிய ஒப்பந்தம்: கசியும் தகவல்
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களும் ஐ.எஸ் கோராசன் குழுவினரும் இரகசிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகவும் இருவரும் பொது எதிரியாக அமெரிக்காவை இனம் கண்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
ஷரியத் சட்டம் அடிப்படையிலான அரசு அமைவதையே தாலிபான்களும், ஐஎஸ் கோராசன் தீவிரவாத அமைப்பும் குறிக்கோளாகக் கொண்டுள்ளன. கொள்கையளவில் இரு தீவிரவாத அமைப்புகளும் ஒரே மாதிரியாக இருந்தாலும், களத்தில் இருவரும் எதிரிகளாகவே மல்லுக்கட்டுகிறார்கள்.
மட்டுமின்றி, ஐஎஸ் கோராசன் தீவிரவாதிகளை ஆப்கானிஸ்தானில் காலூன்ற தாலிபான்கள் மறுத்து வருகிறார்கள். அதேவேளை, இருவருக்கும் இடையிலான பொது எதிரியை ஐஎஸ் கோராசன் தீவிரவாதிகள் கொல்லும்போது மட்டும் தாலிபான்கள் மெளனம் காப்பதாகவே கூறப்படுகிறது.
1980 காலகட்டத்தில் தொடங்கப்பட்ட தாலிபான்கள் அமைப்பு, தொடக்கத்தில் ஹெராத் மாகாணத்தை 1996ம் ஆண்டு கைப்பற்றி, பின்னர் படிப்படியாக ஆப்கானிஸ்தானைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதேவேளை, சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் பரவி இருந்த ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தங்களின் லட்சியமான இஸ்லாமிய அரசை உருவாக்க ஆப்கானிஸ்தானில் கடந்த 2015ம் ஆண்டு கால்பதித்தது. அதுமுதலே தாலிபான்களுக்கும், ஐஎஸ் அமைப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.
தாலிபான்கள், ஐஎஸ் கோராசன் இடையே களத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவதில் மோதல் நிலவினாலும் பொது எதிரி என இருவரும் அமெரிக்காவை எதிர்க்கிறார்கள். கடந்த 26ம் திகதி காபூல் விமான நிலையத்துக்கு வெளியே நடந்த கொலைவெறி மனித வெடிகுண்டு தாக்குதலும் ஐஎஸ் கோராசன் அமைப்பு முன்னெடுத்ததுதான்.
ஆனால், குறித்தத் தாக்குதலுக்கு தாலிபான்கள் கண்டனம் ஏதும் தெரிவிக்கவில்லை. ஆப்கானிஸ்தானை கைப்பற்றும் முனைப்பில் இருக்கும் இரு தீவிரவாத குழுக்கள் தொடர்பில், அவுஸ்திரேலியப் பத்திரிகையாளர் ஸ்டான் கிரான்ட் கூறுகையில்,
தாலிபான், ஐஎஸ் கோராசன் ஆகிய இரு தரப்பினரும் அடிக்கடி மோதிக்கொண்டாலும், பொது எதிரிக்கு எதிராக ஒருமித்துச் செயல்படுகிறார்கள். அந்தப் பொது எதிரி அமெரிக்காதான் என்கிறார்.
ஆப்கன்-பாகிஸ்தான் எல்லையில் செயல்படும் ஐஎஸ் கோராசன் அமைப்பானது ஹக்கானி நெட்வொர்க் உதவியுடன் இயங்குகிறது. ஹக்கானி நெட்வொர்க்கின் தலைவர் சிராஜுதீன் ஹக்கானி தாலிபான் இயக்கத்தில் மூத்த தலைவராக இருந்தவர்.
இதனால், தாலிபான்கள், ஐஎஸ் கோராசன் இடையே வேறுபாடு இருந்தாலும், ஆழ்ந்த தொடர்பு உடையவை, நெருக்கமானவை, பொது எதிரி அமெரிக்காவை குறிவைத்து போராடுவை எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.