பிறந்து ஆறு நாட்கள்., பெற்றோரின் அழுகிய உடல்களுக்கு அருகில் உயிருடன் கிடந்த குழந்தை
தாய் தந்தையின் அழுகிய சடலங்களுக்கு மத்தியில் பிறந்து 6 நாட்களே ஆன குழந்தை உயிருக்காக போராடிக்கொண்டிருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சடலங்களுக்கு மத்தியில் பிறந்து 6 நாட்களே ஆன குழந்தை
உத்தரகாண்டில் உள்ள டேராடூன் நகரத்தில் வீடொன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்த வந்த பொலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
ஆச்சரியப்படும் விதமாக, பிறந்து ஆறு நாட்களே ஆன குழந்தை, அதன் தாய் மற்றும் தந்தையின் அழுகிய உடல்களுக்கு அருகில் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
3 நாட்களுக்கு முன்பு இருவரும் தற்கொலை
உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூரைச் சேர்ந்த காஷிப் (25) மற்றும் அவரது மனைவி அனம் (22) ஆகியோர் டேராடூனில் வாடகைக்கு வசித்து வந்தனர். காஷிப் கிரேன் ஆபரேட்டராக இருந்தார். ஆனம் இல்லத்தரசி. இவர்களுக்கு ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஜூன் 8-ஆம் திகதி குழந்தை பிறந்துள்ளது.
இந்தநிலையில் தான், கடந்த 3 நாட்களுக்கு முன்பு இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குழந்தையின் நிலை
அவர்களின் அழுகிய உடல்களுடன், ஆறு நாட்களே ஆன ஆண் குழந்தை உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் கிடந்ததால், குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
குழந்தை நீரிழப்பு நிலையில் இருப்பதாகவும், தற்போது அவரது உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் குழந்தை இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தற்கொலைக்கான காரணம்?
பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின்படி, சஹாரன்பூரில் உள்ள ஒருவரிடம் காஷிப் ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தை இந்த வாரம் திரும்பக் கொடுக்கப்பட வேண்டியிருந்ததாகவும், பணத்தை கொடுக்க வேண்டிய கடைசி நாளான ஜூன் 10-ம் திகதி அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் இரவு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அன்று இரவு அவர்களது மொபைல் போனில் கடைசியாக வந்த அழைப்புகளை ஆய்வு செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.