டெல்லி குண்டுவெடிப்பு... குடிமக்களை எச்சரித்த அமெரிக்காவும் பிரித்தானியாவும்
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்ட நிலையில் உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் வருத்தத்தையும் அதிர்ச்சியையும் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு ஆலோசனை
பல நாடுகள் இந்தியாவில் வசிக்கும் தங்கள் குடிமக்களுக்கு பாதுகாப்பு ஆலோசனைகளையும் வழங்கியுள்ளன. எச்சரிக்கையாக இருக்கவும், கூட்டம் மிகுந்த பகுதிகளைத் தவிர்க்கவும் கேட்டுக்கொண்டுள்ளன.

இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பு மிகுந்த பகுதியாக கருதப்படும் தலைநகர் டெல்லியில் கார் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதுவரை 9 பேர்கள் மரணமடைந்துள்ளதாகவும் 20க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் உள்விவகார அமைச்சர் அமித் ஷா, டெல்லியின் உயர்மட்ட காவல்துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி காவல்துறை, நாட்டின் உள்விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உட்பட உலகின் பல்வேறு நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு பாதுகாப்பு ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தமது சமூக ஊடகத்தில், டெல்லி குண்டுவெடிப்பில் ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தியாவில் வசிக்கும் தங்களது குடிமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
டெல்லியில் உள்ள செங்கோட்டை மற்றும் சாந்தினி சௌக்கைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கூட்டத்தையும் தவிர்க்குமாறு அமெரிக்கத் தூதரகம் தனது குடிமக்களைக் கேட்டுக் கொண்டது.
மட்டுமின்றி உள்ளூர் ஊடகங்களின் செய்திகளைக் கண்காணிக்கவும்; எச்சரிக்கையாக இருக்கவும்; சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வரும் இடங்களில் எச்சரிக்கையாக இருக்கவும் கேடுக்கொண்டுள்ளனர்.

பிரித்தானியாவும், டெல்லியில் சம்பவ இடத்தைச் சுற்றி எவரேனும் சிக்கியிருந்தால், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியாவுக்கான அர்ஜென்டினா தூதர் மரியானோ காசினோ தெரிவிக்கையில், செங்கோட்டை குண்டுவெடிப்பின் விளைவாக அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
உயர் பாதுகாப்பு எச்சரிக்கை
இதேப்போன்று, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ஈரான், மொராக்கோ, இலங்கை உள்ளிட்ட நாடுகளும் தங்கள் வருத்தத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளது.

டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பின் பின்னணி குறித்து பாதுகாப்பு அமைப்புகள், மற்றும் காவல்துறையினர் பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லி சர்வதேச விமான நிலையம், மெட்ரோ நிலையங்கள் மற்றும் அரசு கட்டிடங்கள் உயர் பாதுகாப்பு எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, செங்கோட்டைக்கு அருகிலுள்ள போக்குவரத்து சிக்னல் அருகே ஹூண்டாய் ஐ20 கார் ஒன்று வெடித்ததாக உள்விவகார அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரத்தில் அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருவதாகவும், அனைத்து சாத்தியக்கூறுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு முழுமையான விசாரணையை முன்னெடுக்க இருப்பதாகவும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |