திட்டமிட்ட படுகொலை... பட்டினியால் சாகும் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு
தெற்கு காஸாவில் உணவு விநியோக தளத்தை ஆயிரக்கணக்கானோர் அடைய முயன்ற நிலையில் இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதலால் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உணவுக்குத் திரண்ட
போரினால் பாதிக்கப்பட்ட காஸாவில் ஆயிரக்கணக்கான பட்டினியால் வாடும் பாலஸ்தீனியர்கள் சர்ச்சைக்குரிய இஸ்ரேல்-அமெரிக்க அமைப்பிடமிருந்து உணவைப் பெற முயன்றனர்.
ஆனால் ஹெலிகொப்டரில் வட்டமிட்ட இஸ்ரேல் இராணுவம் உணவுக்குத் திரண்ட பாலஸ்தீனர்களை அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் குறைந்தது மூவர் கொல்லப்பட்டதுடன் டசின் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலின் மூன்று மாத கால உதவித் தடையால் அந்தப் பகுதிக்கு ஏற்பட்ட பேரழிவின் அளவை இது வெளிப்படுத்துகிறது என்றே மனித உரிமை ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.
செவ்வாய்க்கிழமை நண்பகல் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வேலிகளைத் தாண்டிச் சென்று, காஸா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) கொண்டு வந்த உயிர்காக்கும் பொருட்களை அடைய திரண்ட கூட்டத்தின் நடுவே தள்ளப்பட்டனர்.
முற்றுகையிடப்பட்ட பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு உதவிகளை வழங்கும் பணியில் ஒரு புதிய மற்றும் சர்ச்சைக்குரிய குழு ஈடுபட்டுள்ளது. இஸ்ரேலிய இராணுவ ஹெலிகொப்டர்கள் வட்டமிட, துப்பாக்கிச் சூடுச் சத்தங்களுக்கும் மத்தியில்,
தெற்கு காஸாவின் ரஃபா பகுதியில் பெண்கள் மற்றும் சிறார்கள் உட்பட உலக நாடுகளால் கண்டுகொள்ளப்படாத மக்கள் உணவு விநியோக இடத்தை அடைய சிரமப்பட்டனர்.
நாங்கள் பட்டினியால் இறந்து கொண்டிருக்கிறோம். சாப்பிட விரும்பும் எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் உணவளிக்க வேண்டும். வேறு என்ன செய்ய முடியும்? அவர்களுக்கு உணவளிக்க நான் எதையும் செய்ய துணிந்துவிட்டேன் என்று ஒரு பாலஸ்தீன தந்தை அல் ஜசீரா செய்தி ஊடகத்திடம் கதறியுள்ளார்.
திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை
மக்கள் ஓடுவதைக் கண்டோம், அவர்களைப் பின்தொடர்ந்தோம், அது ஒரு ஆபத்து எடுக்க வேண்டியதாக இருந்தாலும் கூட, அது பீதியை ஏற்படுத்துவதாக இருந்தது. ஆனால் பயம் பட்டினியை விட மோசமானதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உணவுக்கான கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் தவிர, பலர் காணாமல் போயுள்ளதாகவும் காஸா அதிகாரிகள் தெரிவித்தனர். பரவலான பசி மற்றும் சிறார்கள் உட்பட பாலஸ்தீன பொதுமக்கள் மீது இஸ்ரேல் இடைவிடாமல் நடத்தும் குண்டுவீச்சு நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இன்று ரஃபாவில் நடந்தது திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை மற்றும் முழுமையான போர்க்குற்றமாகும், இது 90 நாட்களுக்கும் மேலாக பட்டினியால் பலவீனப்படுத்தப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு எதிரான கொடுஞ்செயல் என்றே காஸா அரசாங்க ஊடக அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
ஆனால் இச்சம்பவத்தில் விளக்கமளித்த இஸ்ரேல் இராணுவம், தங்கள் படைகள் பாலஸ்தீனியர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை, மாறாக வெளிப்புறப் பகுதியில் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |