வணிக வளாகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த மன நோயாளி: டென்மார்க்கில் அரங்கேறிய பயங்கர சம்பவம்!
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் உள்ள வணிக வளாகத்தில் நேற்று நடைபெற்ற பயங்கர துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் மேலும் நான்கு பேர் பயங்கர காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்காக போராடி வருகின்றனர்.
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் (Copenhagen) உள்ள வணிக வளாகத்தில் நேற்று 22 வயதுடைய மர்ம நபர் ஒருவர் பயங்கர துப்பாக்கியுடன் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 17 வயதுடைய ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் இவர்களுடன் 47 வயதுடைய மனிதர் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பொலிஸார்களின் தகவலின் அடிப்படையில் உயிரிழந்துள்ள 47 வயது மனிதர் டென்மார்க்கில் வசிக்கும் ரஷ்யர் என தெரியவந்துள்ளது.
அத்துடன் இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில், கூடுதலாக நான்கு பேர் மிகவும் மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்காக போராடி வருகின்றனர்.
22 வயதுடைய இளைஞரின் இந்த பயங்கர தாக்குதலின் போது, வணிக வளாகத்தில் இருந்த நுற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களது உயிர்களை காப்பாற்றி கொள்வதற்காக பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தாக்குதல் இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், வணிக வளாகத்தில் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 22 வயது இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக கோபன்ஹேகன் காவல்துறை தெரிவித்துள்ள தகவலில், 22 வயது இளைஞரின் தனிப்பட்ட செயல் இதுவென்றும், இவற்றில் தீவிரவாத நோக்கம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த தாக்குதலுக்கான காரணமும் இதுவரை தெளிவாக தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: மனைவியிடம் நகைச்சுவை செய்து சிரித்த கணவருக்கு...அடுத்த 10 நிமிடத்தில் நடந்த பரிதாபம்!
கோபன்ஹேகன் நகர தலைமை காவலர் Soren Thomassen அளித்த செய்தியாளர்கள் விளக்கத்தில், கைது செய்யப்பட்ட நபர் மனநல சிகிச்சையில் இருந்தவர் என்றும், வேறு எந்த தகவலும் தற்போது வழங்க முடியாது எனத் தெரிவித்தார்.