Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர்
Dentist reveals how he saved Captain Smit Machchhar: கேப்டன் ஸ்மித் மச்சாரை எப்படி காப்பாற்றினார் என்பதை பல் மருத்துவர் வெளிப்படுத்தினார்.
டெல் அவிவ் நோக்கிச் சென்ற flydubai விமானத்தில் ஏற்பட்ட தாக்குதலில், விமானியின் தலை மற்றும் கையில் ஏற்பட்ட பலத்த ரத்தப்போக்கை இஸ்ரேலிய பல் மருத்துவர் ஒருவர் சுமார் 45 நிமிடங்கள் சிகிச்சை அளித்து கட்டுப்படுத்தியதால், கேப்டன் ஸ்மித் மச்சார் உயிர் தப்பியுள்ளார்.
குணமடைந்து வருகிறார்
குறித்த தகவலை தொடர்புடைய பல் மருத்துவரே ABC செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்து கொண்டுள்ளார். 170-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற விமானத்தை விபத்துக்குள்ளாக்கும் முயற்சியாகக் கருதப்படும் ஒரு சம்பவத்தில், ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி தாக்கியதில் மச்சார் மிக மோசமாக காயமடைந்தார்.

அதன்பிறகு, மச்சார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரால் ஒரு ஹீரோவாகப் பாராட்டப்பட்டுள்ளார்.
மச்சார் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் குணமடைந்து வருகிறார். அவர் தொடர்ந்து சீரான முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், உடல்நலம் தேறி வருவதாகவும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இஸ்ரேலில் வசிக்கும் ஜார்ஜிய பல் மருத்துவரான டாக்டர் ஷுடா மூசாயேவ், அலறல் சத்தங்களைக் கேட்ட பிறகு விமானத்தின் காக்பிட்டை நோக்கிச் சென்றதாகக் கூறினார்.
படுகாயமடைந்த விமானியின் பக்கம் தனது கவனத்தைத் திருப்புவதற்கு முன்பு, தாக்குதல்தாரியைக் கட்டுப்படுத்த அவர் உதவியுள்ளார். காக்பிட்டில் நடந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து, மற்றொரு பயணியான யானிவ் ஹயூன், தாக்குதலில் ஈடுபட்ட நபரை விமானி அறையிலிருந்து இழுத்து அகற்றிவிட்டு, விமானத்தின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டு அதைச் சீரான நிலையில் பறக்கச் செய்ததாகவும்,
அதன்பின்னர் மூன்றாவது விமானி கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தாக்குதல் நடத்தியவர் அடக்கப்பட்டதும், தலை, கழுத்து மற்றும் கைகளில் பலத்த காயங்களுக்கு ஆளாகியிருந்த மச்சார் மீது மருத்துவர் மூசாயேவ் கவனம் செலுத்தியுள்ளார்.
இக்கட்டான சூழல்
மூசாயேவ் தெரிவிக்கையில், மச்சாரின் தலையிலிருந்தும் இடது கையிலிருந்தும் பலத்த ரத்தப்போக்கு இருந்தது, ஆரம்பத்தில் காயங்களின் மீது அழுத்தம் கொடுக்க டி-ஷர்ட்களைப் பயன்படுத்தியதாகவும், ஆனால் ரத்தப்போக்கு நின்றபாடில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 45 நிமிடங்கள் போராடி ரத்தப்போக்கை ஒருவழியாகக் கட்டுப்படுத்தியதாக மூசாயேவ் தெரிவித்துள்ளார். அந்த இக்கட்டான சூழல் முழுவதும் கேப்டனிடம் பேசிக்கொண்டே, அவரை உணர்வுடன் வைத்திருக்கவும் மூசாயேவ் முயன்றுள்ளார்.
தூங்காதீர்கள், என்ஹ்களுக்கு நீங்கள் வேண்டும் என மச்சாரிடம் குறிப்பிட்டதையும் மூசாயேவ் நினைவுகூர்ந்துள்ளார். மட்டுமின்றி, அந்த மிக மோசமான கட்டத்திலும் மச்சார் தமது வயது, பெயர், எந்த நாட்டவர் மற்றும் குடியிருப்பது எங்கே என்றும் மூசாயேவிடம் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, மூசாயேவிடம் தம்மை காப்பாற்ற வேண்டும் என்று மச்சார் கெஞ்சியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிலைமை மிகவும் மோசமடைந்த நிலையில், மச்சார் காக்பிட் தரையிலேயே இருந்ததாக பல் மருத்துவர் கூறியுள்ளார்.

ஒரு கட்டத்தில், விமானம் கீழே இறங்கிக்கொண்டிருப்பதைக் கவனித்த மூசாயேவ், காக்பிட் அறையின் கதவைத் திறக்க இறுதி முயற்சியை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மச்சாரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவரது நாடித்துடிப்பை மீட்டெடுக்கும் முயற்சியாகத் தான் அவரது கால்களை உயர்த்தியதாக மூசாயேவ் கூறியுள்ளார்.
விமானம் சவுதி அரேபியாவில் தரையிறங்கும் வரை, மேலும் ஏதேனும் தாக்குதலாளிகள் இருக்கிறார்களா என்று கண்டறிய பயணிகளில் ஒரு சிறிய குழுவினர் விமானத்திற்குள் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாகவும் மூசாயேவ் கூறியுள்ளார்.