ஓடுபாதையில் அத்துமீறி நுழைந்த நபர்: புறப்படத் தயாரான விமானம் மீது மோதி உயிரிழப்பு
டென்வர் விமான நிலையத்தில் ஓடுபாதையில் அத்துமீறி நுழைய முயன்ற நபர் மீது விமானம் மோதியதில் அவர் உயிரிழந்தார்.
விமானம் மோதி ஒருவர் பலி
சனிக்கிழமை நள்ளிரவு டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்புகளை அத்துமீறி கடந்து ஓடுபாதையில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் புறப்பட தயாராக இருந்த விமானத்தின் மீது மோதி உயிரிழந்தார்.
பிரான்டியர் ஏர்லைன்ஸ் விமானம் தொடர்புடைய இந்த விபத்தை தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஓடு பாதைக்குள் அத்துமீறி நுழைந்த நபர் விமான நிலையத்தின் பாதுகாப்பு வேலிகளைத் தாண்டி குதித்து உள்ளே நுழைந்துள்ளார்.

பிரான்டியர்(Frontier) விமானம் 4345 லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கி புறப்பட்ட போது அத்துமீறி நுழைந்த நபர் 17L ஓடு பாதையை கடக்க முயன்றதை அடுத்து விமானம் மோதி உயிரிழந்துள்ளார்.
நபர் ஒருவர் மீது விமானம் மோதியதை உணர்ந்த விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தினார். மேலும் மோதலை தொடர்ந்து விமானத்தின் என்ஜினில் தீ பிடித்தது.
விபத்தில் சிக்கிய விமானத்தில் 224 பயணிகளும், 7 விமான ஊழியர்களும் இருந்த நிலையில் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
துர்திஷ்டவசமாக விமானத்தில் இருந்து வெளியேறும் போது 12 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
விசாரணை தீவிரம்
விமானம் மோதி உயிரிழந்த நபர் யார் என்பது இதுவரை அடையாளம் காணவில்லை.
ஆனால் அவர் விமான நிலைய ஊழியர் இல்லை என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |