ஒரு நகரத்தில் மட்டும் 5,300 சடலங்கள்... மூழ்கடித்த பெருவெள்ளம்: ஆயிரக்கணக்கானோர் மாயம்
லிபியாவின் டேர்னா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கிய டேனியல் புயலில் 2 அணைகள் சேதமடைந்ததையடுத்து நகரின் பெரும்பகுதி நீரில் மூழ்கியுள்ளன.
பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மக்கள்
இதுவரை பல ஆயிரம் மக்கள் மரணமடைந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டாலும், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது. டேர்னா நகரில் இரு அணைகள் உடைந்ததை அடுத்தே பெருவெள்ளத்தில் கட்டிடங்களும் மக்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
@ap
கிழக்கு லிபியாவின் அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கையில், டேர்னா நகரில் இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 5,300 எனவும், இந்த எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பெருவெள்ளத்தில் சிக்கி பலியானவர்கள் மொத்த எண்ணிக்கை 6,000 என்றே கூறப்படுகிறது. அத்துடன், 10,000 பேர்களை காணவில்லை எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
@ap
அடையாளம் காண கோரிக்கை
பலர் கடலில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. டேர்னா நகர மருத்துவமனைகளில் உடல்கள் தரையில் கிடத்தப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் காணாமல் போனவர்களை அடையாளம் காண உறவினர்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
டேர்னா நகரை சேர்ந்த ஒருவர், தமது குடும்பத்தினர் 30 பேர்களை பெருவெள்ளத்திற்கு காவுகொடுத்ததாக கதறியுள்ளார். டேர்னா நகரம் மொத்தமாக தரைமட்டமான நிலையில் காணப்படுகிறது.
@reuters
லிபியாவின் அரசியல் நெருக்கடி காரணமாக மீட்புப் பணிகள் சிக்கலானதாகவும் தாமதமாவதாகவும் கூறுகின்றனர். டேர்னா நகரில் இருந்து மட்டும் 30,000 மக்கள் பாதுகாப்பாக வேறு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். அத்துடன், புயலால் பாதிக்கப்பட்ட வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 6,500 பேர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |