ஆக்லாந்து தாக்குதல்தாரியை நேருக்கு நேர் சந்தித்தேன்: பகீர் நிமிடங்களை பகிர்ந்து கொண்ட இளைஞர்
நியூசிலாந்தின் ஆக்லாந்தில் பல்பொருள் அங்காடியில் தாக்குதல் நடத்திய ஆயுததாரியை நேருக்கு நேர் எதிர்கொண்டதாக நபர் ஒருவர் முதன்முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.
பொலிசார் அந்த தாக்குதாரியை சுட்டுக்கொல்வதற்கும் சில நொடிகள் முன்பு கம்பம் ஒன்றால் அவரை எதிர்கொண்டதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் மேற்கு ஆக்லாந்து பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியில் இலங்கையர் என அடையாளம் காணப்பட்டவர் ஆறு வாடிக்கையாளர்களைக் கத்தியால் தாக்கிய நிலையில், அந்த தாக்குதல்தாரியை கம்பத்தால் எதிர்கொள்ளும் முன் பெண் ஒருவர் ரத்த காயங்களுடன் தரையில் படுத்திருந்ததை பார்த்ததாக அமித் நந்த் கூறியுள்ளார்.
சம்பவம் நடந்த அடுத்த நொடியே, மக்கள் பீதியில் அலறியபடி வெளியேறியதாகவும், தம்மையும் அந்த அங்காடியில் இருந்து வெளியேற கூறியதாகவும் அமித் நந்த் தெரிவித்துள்ளார்.
அப்போது தான் ரத்தக்காயங்களுடன் உதவிக்கு கெஞ்சும் பெண் ஒருவரை பார்த்ததாகவும், அதேவேளை கத்தியுடன் ஒருவரையும், அவர் அல்லாஹ் அல்லாஹ் என முணு முணுப்பதையும் தாம் கேட்டதாக அமித் நந்த் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கம்பம் ஒன்றை கைப்பற்றிய அமித் நந்த் அந்த தாக்குதல்தாரியிடம், கத்தியை கைவிட கூறியதாகவும், திடீரென்று அப்பகுதிக்கு நுழைந்த காவல்துறை அதிகாரி ஒருவர் அந்த தாக்குதல்தாரியை 5 முறை துப்பாகியால் சுட்டதாகவும் அமித் நந்த் தெரிவித்துள்ளார்.
இலங்கையர் என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த தாக்குதல்தாரியை 2016 முதல் பொலிசார் கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.