உக்ரைன் தலைநகரை நெருங்கும் ரஷ்யப் படை: தப்புவதற்காக மக்கள் மேற்கொண்ட கடைசி நேர நடவடிக்கை
உக்ரைன் தலைநகரை ரஷ்ய இராணுவத்தின் பிரிவு ஒன்று நெருங்குவதை அறிந்து மக்கள் ரயிலில் ஏறித் தப்ப முயல்வதைக் காட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
நேற்றிரவு உக்ரைன் தலைநகர் Kyivஇல், குடியிருப்புப் பகுதிகளில் வான்வெளித்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ரஷ்ய இராணுவத்தின் ஒரு முழு பிரிவு, சுமார் 15,000 இராணுவ வீரர்கள் கொண்ட இராணுவப் பிரிவு ஒன்று நெருங்குவதாக தகவல் கிடைத்துள்ளது.
அத்துடன், தென் கிழக்கு திசையிலிருந்து மற்றொரு படைப்பிரிவும் Kyivஐ நெருங்குவதாகவும், உக்ரைன் தலைநகரை சுற்றி வளைப்பது அதன் திட்டம் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
40 மைல் தூரத்துக்கு, இராணுவ டாங்குகள் முதல் ஆயுதம் தாங்கிய வாகனங்கள் வரை நகரை நெருங்குவது குறித்து அறிந்த உக்ரைனியர்கள், எந்த நேரத்திலும் தலைநகருக்குள் ரஷ்யப் படைகள் நுழைந்துவிடலாம் என்ற அச்சத்தில் தலைநகரிலிருந்து வெளியேற முயன்று வருகிறார்கள்.
அவ்வகையில், ஏற்கனவே நிரம்பி வழியும் ரயில் ஒன்றில் மக்கள் ஏற முண்டியடிப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அவர்களில் குழந்தைகளுடன் இருக்கும் பெண்களும் சிறு பிள்ளைகளும் இருப்பதையும் காணலாம்.
இந்நிலையில், நேற்று Kyivஇல் உள்ள 1,300 அடி உயர தொலைக்காட்சி டவர் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டது. அந்த தாக்குதலில் அந்த டவரின் அருகில் நடந்து சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளார்கள்.
அந்த டவரின் சிறப்பம்சம் என்னவென்றால், சோவியத் யூனியனுக்கு எதிராக ஹிட்லர் போர் தொடுக்கும்போது, அந்த இடத்தில் 34,000 யூதர்கள் உட்பட 150,000 பேர் வரை நாஸிக்களால் கொல்லப்பட்டார்கள். அவர்கள் நினைவாகத்தான் அந்த இடத்தில் அந்த டவர் அமைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.