லியோனார்டோ டிகாப்ரியோ பெயரில் புதிய தவளை இனம்! ஈக்வடாரில் கண்டுபிடிப்பு
ஈக்வடாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய தவளை இனத்திற்கு ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
புதிய தவளை இனம்
ஈக்வடாரில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட தவளை இனத்திற்கு அகாதமி விருது வென்ற நடிகர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஃபிலோனாஸ்டஸ் டிகாப்ரியோய்(Phyllonastes Dicaprioi) என்று அழைக்கப்படும் இந்த தவளை, எல் ஓரோ(El Oro) மாகாணத்தின் மேற்கு மலைக் காட்டில் ஆராய்ச்சியாளர்களால் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஏழு புதிய இனங்களில் ஒன்றாகும்.
இந்த தனித்துவமான நீர்நில வாழ்வி சிறியது, பழுப்பு நிறத்தில் கருப்பு புள்ளிகளுடன், கடல் மட்டத்திலிருந்து 1,300 முதல் 1,700 மீட்டர் உயரமுள்ள பகுதிகளில் வாழ்கிறது.
ஆராய்ச்சியாளர்களின் வேண்டுகோள்
இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள், செழித்து வளரும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துக்கின்றனர்.
லியோனார்டோ டிகாப்ரியோ சுற்றுச்சூழல் காரணங்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுபவர் என்பது அனைவருக்கும் தெரியும். சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 1998 இல் லியோனார்டோ டிகாப்ரியோ அறக்கட்டளையை நிறுவினார்.
யாசுனி தேசிய பூங்காவில் சர்ச்சைக்குரிய எண்ணெய் துளையிடும் திட்டத்தை எதிர்ப்பது உட்பட, ஈக்வடாரில் அவரது பாதுகாப்பு முயற்சிகளுக்கான ஆதரவே, புதிய தவளை இனத்திற்கு அவரது பெயரைச் சூட்ட விஞ்ஞானிகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது.
லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயரால் ஒரு இனம் பெயரிடப்படுவது இது முதல் முறை அல்ல.
2024 இல், இமயமலையில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு இனத்திற்கும் அவரது சுற்றுச்சூழல் வாதத்திற்காக ஆங்குகுலஸ் டிகாப்ரியோய்(Anguiculus dicaprioi) என்று பெயரிடப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |