உங்கள் தந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து கடலில் வீசுவேன்: ஜனாதிபதிக்கு துணை ஜனாதிபதி மிரட்டல்
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸின் தந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து கடலில் வீசுவேன் என துணை ஜனாதிபதி சாரா டுடெர்டே மிரட்டல் விடுத்துள்ளார்.
மிகப்பெரிய அரசியல் குடும்பம்
கடந்த 2022 தேர்தலில் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டார் சாரா டுடெர்டே. இந்த கூட்டணி பெரும் வெற்றியை குவித்தது. ஆனால் கடந்த ஜூன் மாதம் அமைச்சரவையில் இருந்து சாரா விலகினார்.
அதன் பின்னர் பிலிப்பைன்ஸ் நாட்டிலேயே இரண்டு மிகப்பெரிய அரசியல் குடும்பமும் மோதல் போக்கிலேயே இருந்து வருகிறது. 2028ல் ஜனாதிபதி தேர்தலுக்கு இரு குடும்பமும் தயாராகி வரும் நிலையில், அடுத்த ஆண்டில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் தங்கள் வலிமையை நிரூபிக்க உள்ளனர்.
உண்மையில் சாரா டுடெர்டே கட்சிக்கே பிலிப்பைன்ஸ் மக்களிடம் கொஞ்சம் செல்வாக்கு அதிகமாக உள்ளது. ஆனால் சாராவின் தந்தை, முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே தற்போது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.
அவரது ஆட்சி காலத்தில் போதை மருந்துக்கு எதிரான போரில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் நடந்ததாக குறிப்பிட்டு வழக்குப்பதியப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில்,
ஜனாதிபதிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை சாரா முன்வைத்துள்ளார். பணவீக்கம் மற்றும் உணவுப் பாதுகாப்பை சமாளிக்க அவரது நிர்வாகத்தில் தெளிவான கொள்கைகள் இல்லை என்றார்.
ஜனாதிபதியின் தலையை
மட்டுமின்றி, ஒருமுறை ஜனாதிபதியின் தலையை வெட்ட வேன்றும் என நினைத்ததாகவும் சாரா வெளிப்படையாக தெரிவித்துள்ளார். தனது செல்வாக்கை பயன்படுத்தி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் அரசியல் ஆதாயம் தேடிக்கொண்டதாக சாரா குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஒரு இளம் பட்டதாரி அவமானப்படுத்தப்பட்ட செய்தி அறிந்து, ஜனாதிபதியின் தலையை வெட்ட வேண்டும் என நினைத்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த நாட்களில் ஒரு நாள், நான் அங்கு செல்வேன். உங்கள் தந்தை மார்கோஸின் உடலை தோண்டி எடுத்து மேற்கு பிலிப்பைன்ஸ் கடலில் வீசுவேன் என காட்டமாக பதிலளித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே ஆட்சி காலத்தில் போதை மருந்து சந்தேக நபர்களை கொலை செய்யும் பொலிஸ் அதிகாரிகளுக்கு 17,000 டொலர் வரையில் வெகுமதி அளித்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆனால் கொலை செய்யும் உத்தரவை தாம் பிறப்பிக்கவில்லை என்றே ரோட்ரிகோ டுடெர்டே வாதிட்டு வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |