நாவூறும் சுவையில் திண்டுக்கல் மட்டன் பிரியாணி: எப்படி செய்வது?
திண்டுக்கல் மட்டன் பிரியாணி என்றாலே அதன் தனித்துவமான சுவை சாப்பிட்டால் அப்படியே நாக்கிலே தங்கிவிடும்.
இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு சுவையான மட்டன் பிரியாணி.
பாரம்பரியமான முறையில் நாவூறும் சுவையில் வீட்டிலேயே திண்டுக்கல் மட்டன் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சீரகசம்பா அரிசி- 1kg
- மட்டன்- 1¼ kg
- பெரிய வெங்காயம்- 2
- சின்ன வெங்காயம்- 200g
- தக்காளி- 1
- பூண்டு- 150g
- இஞ்சி- 150g
- மிளகாய் தூள்- 10g
- பச்சை மிளகாய்- 4
- புதினா- 1 கைப்பிடி
- கொத்தமல்லி- 1 கைப்பிடி
- பட்டை- 2 துண்டு
- ஏலக்காய்- 7
- கிராம்பு- 8
- அன்னாசி பூ- 2
- எலுமிச்சை- ½
- தயிர்- 100ml
- நெய்- 200ml
- எண்ணெய்- 100ml
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தவும்.
அடுத்து இதில் மிளகாய் தூள் சேர்த்து கிளறவும், பின் பச்சைமிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின் புதினா இலை, கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கி சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் ஒன்றிண்டாக சேர்த்து அரைத்து சேர்த்து வதக்கவும்.
அடுத்து இதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதங்கியதும் இதில் தக்காளி மற்றும் தயிர் சேர்த்து வதக்கவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ சேர்த்து தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து பின் மட்டனை சேர்த்து நன்கு கிளறவும்.
மட்டன் நன்கு வதங்கி வந்ததும் மட்டன் மூழ்கின்ற அளவிற்கு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 20 நிமிடம் நன்கு வேக வைக்கவும்.
சீரக சம்பா அரிசியை கழுவி 20 நிமிடம் நன்கு ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு கப் அரிசிக்கு 1½ கப் தண்ணீர் அளந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
மட்டன் நன்கு வெந்ததும் எடுத்துவைத்துள்ள அளவு தண்ணீர் ஊற்றி கொதித்து வந்ததும் எலுமிச்சை சாறு மற்றும் அரிசி சேர்த்து அதிகமான தீயில் வைத்து வேகவைக்கவும்.
அரிசி முக்கால் பதம் வெந்து வந்ததும் மிதமான தீயில் வைத்து 20 நிமிடம் தம் போட்டு கிளறினால் சுவையான திண்டுக்கல் மட்டன் பிரியாணி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |