சிக்சர்களாக விளாசிய தினேஷ் கார்த்திக்! ஆட்டநாயகன் விருதை வென்ற பின் பேசிய வார்த்தைகள்
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்காவது போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக இருந்த தினேஷ் கார்த்திக் போட்டிக்கு பிறகு மனம் திறந்துள்ளார்.
இப்போட்டியில் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 27 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் தினேஷ் கார்த்திக்.
சிறப்பான அட்டத்தை வெளிப்படுத்தியதற்கு பரிசாக ஆட்டநாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது. ஆட்டநாயகன் விருது வென்றபிறகு பேசிய தினேஷ் கார்த்திக், பேட்டிங்கில் தனது முன்னேற்றத்திற்கு பயிற்சியாளர் தான் முக்கிய காரணம் என தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், மகிழ்ச்சியாக உணர்கிறேன், கடந்த போட்டியில் நான் வைத்திருந்த திட்டங்கள்படி எதுவும் நடக்கவில்லை, ஆனால் இந்த போட்டியில் எனது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்க வேண்டும் என நினைத்திருந்தேன்.
சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவதற்கு அதிகமான பயிற்சிகள் மேற்கொண்டுள்ளேன். பேட்டிங்கிற்கு இந்த ஆடுகளம் சவாலாக இருந்தது, பவுண்டரி அடிப்பதே சிரமமாக இருந்தது. பேட்டிங்கில் எனது முன்னேற்றத்திற்கு பயிற்சியாளர் தான் முக்கிய காரணம்.
நான்காவது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணிக்கு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது. கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்ல கடுமையாக முயற்சிப்போம்.
நான் களத்திற்குள் சென்ற உடனே, ஹார்திக் அருகில் வந்து, ‘பிட்சை கணிக்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்’ எனக் கூறினார். நான் நேரம் எடுக்கும்வரை, ஹார்திக் அதிரடியாக விளையாடி, எனக்கு அழுத்தங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொண்டார். இப்படியொரு வீரர் நிச்சயம் தேவை’’ எனத் தெரிவித்தார்.