ஒரு அமாவாசை கூட தாங்காது! விஜயின் கட்சியை மறைமுகமாக விமர்சிக்கும் திமுக
ஓரிரு அமாவாசை கூட தாங்காது என்று விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் கட்சியை ஆர்.எஸ். பாரதி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அவர் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்தும், மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தும் வருகிறார்.
மேலும், பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் கட்சிக் கொடியையும், கட்சி பாடலையும் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.
ஆர்.எஸ். பாரதி விமர்சனம்
இந்நிலையில், கலைஞரின் 101 -வது பிறந்தநாளை முன்னிட்டு நாகையில் மாற்று கட்சியினர் திமுகவின் இணையும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அமைச்சர் ரகுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். மாற்று கட்சியை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
பின்னர் பேசிய ஆர்.எஸ்.பாரதி, "நாகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது மீனவர்கள் தி.மு.க.வின் மீது நம்பிக்கையோடு உள்ளனர் என்பது தெரிகிறது.
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. யார் கட்சி ஆரம்பித்தாலும் நமக்கு கவலை இல்லை. ஓரிரு அமாவாசை கூட தாங்காது.
ஏற்கனவே இருக்கும் கட்சியை பார்த்து புது கட்சி தொடங்குவது புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல இருக்கிறது.
கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. திமுகவில் இருந்து சென்று கட்சி ஆரம்பித்ததால் தான் எம்.ஜி.ஆர் நிலைக்க முடிந்தது" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |