திமுக MLA மகன் வீட்டில் நடந்த பிரச்சனை தவறு என்று முதல்வர் சொன்னாரா? நடிகை குஷ்பு ஆவேசம்
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கே தெரியும் என்று நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.
கோயிலை சுத்தம் செய்த குஷ்பு
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். அதன்படி பல தலைவர்கள் கோயிலை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டார்.
எங்க மாமனார் என்னம்மா பண்ணாரு? ஏதாவது வேணும்னா அக்கா கிட்ட கேட்ருக்கலாம்: திமுக MLA மருமகள் விளக்கம்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கோயில்களை சுத்தம் செய்வது ஒன்றும் புதிதல்ல. இதை பார்த்து மற்றவர்களும் சுத்தம் செய்ய வருவார்கள். கோயிலில் பல இடங்களில் அசுத்தமாக இருக்கிறது. கோயிலைச் சுத்தமாக வைத்தால் அங்கு போகும்போது நிம்மதி கிடைக்கும்" என்றார்.
திமுக MLA மகன் விவகாரம்
மேலும் பேசிய அவரிடம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளால் இளம்பெண் துன்புறுத்தலுக்கு உள்ளானது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த குஷ்பு, "ஆளும் கட்சியான திமுகவினர் வீட்டிலேயே சிறுமிக்கு கொடுமை நடந்துள்ளது. திமுகவினர் வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் தமிழகத்தில் எப்படி பாதுகாப்பு இருக்கும்?
திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கே தெரியும். திமுக MLA கருணாநிதி வீட்டுப் பிரச்சனையில் முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? சிறுமிக்கு ஆறுதல் சொன்னாரா? இப்படி நடந்தது தவறு, நான் அவர்களுக்கு ஆறுதலாக இருப்பேன் என்று சொன்னாரா? பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு முதலமைச்சர் பேசி நான் பார்த்ததில்லை" என்றார்.
மேலும், "இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டது சிறுமி என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் வரும், மகளிர் ஆணைய விசாரணை வரம்புக்குள் வராது” என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |