உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக நேரலையில் குரல் கொடுத்த இளம்பெண்ணை நினைவிருக்கிறதா: அவர் எங்கிருக்கிறார் தெரியுமா?
ரஷ்யாவில், உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக நேரலையில் தொலைக்காட்சியில் குரல் கொடுத்ததற்காக கைது செய்யப்பட்ட இளம்பெண் செய்தியாளரை நினைவிருக்கலாம்.
உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக நேரலையில் குரல் கொடுத்த இளம்பெண்
கடந்த ஆண்டு, மார்ச் மாதம் ஒருநாள், ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றில், நேரலையில் செய்தி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தபோது, திடீரென, ’போரை நிறுத்துங்கள், ரஷ்ய அரசு கூறுவதை நம்பாதீர்கள், அவர்கள் பொய் சொல்கிறார்கள்’ என்று எழுதப்பட்ட பதாகையுடன் செய்தி வாசிப்பவரின் பின்னால் தோன்றினார் ஒரு இளம்பெண்.
அவரது பெயர் Marina Ovsyannikova. அவர் ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றின் எடிட்டர் ஆவார்.
பின்னர் கைது செய்யப்பட்ட Marinaமீது, அங்கீகாரமற்ற பொது நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது, அவருக்கு 30,000 ரூபிள்கள் அபராதம் விதிக்கப்பட்டது. மின்னணு கண்காணிப்பு பிரேஸ்லெட் பொருத்தப்பட்டு, வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார் அவர். விசாரணைக்குப் பின் அவர் 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படும் நிலை உருவாகியிருந்தது.
தற்போது அவர் எங்கிருக்கிறார் தெரியுமா?
இந்நிலையில், Marinaவின் சட்டத்தரணிகள் , அவர் சிறையில் அடைக்கப்பட்டால் வெளியே வரும்போது ஒரு சராசரிப் பெண்ணாக வெளியே வரமுடியாது, வாழ்வே சிதைந்துபோகும் என்று எச்சரித்து, ரஷ்யாவிலிருந்து தன் மகளுடன் தப்பியோடுவதே அவருக்கு நல்லது என கூறியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, தனது 11 வயது மகளுடன் ரஷ்யாவிலிருந்து தப்பும் முயற்சியில் இறங்கியுள்ளார் Marina.
மறைந்து மறைந்து, பல கார்கள் மாறி, கடைசி கார் சேற்றில் சிக்க, கால்நடையாக ஓடி, உயிர் பிழைப்போமா என அச்சத்துடன் எல்லையை அடைந்தபோது, அங்கு தங்களை வரவேற்க ஒரு தொண்டு நிறுவனத்தினர் காத்திருப்பதை அறிந்து நிம்மதிப்பெருமூச்சு விட்டிருக்கிறார் Marina.
தற்போது, பிரான்ஸ் அவருக்கு புகலிடம் அளித்துள்ளது. பிரெஞ்சு கிராமம் ஒன்றில் வாழ்ந்துவரும் Marina, இப்போதும் உயிருக்கு பயந்தே வாழ்வதாக தெரிவிக்கிறார். பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான், Marinaவுக்கு புகலிடம் அளிப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Marina, உக்ரைனிலுள்ள Odesaவில், உக்ரைனிய தந்தைக்கும், ரஷ்யத் தாய்க்கும் பிறந்தவர் ஆவார்.
சிறுவயதில், செசன்யப் போரின்போது ரஷ்யப் படைகளால் வீடிழந்து அகதிகளோடு உயிர் தப்ப ஓடியதை நினைவுகூறும் Marina, அதேபோலத்தான் தற்போது உக்ரைன் பெண்களும் உணர்வார்கள் என்பதைத் தன்னால் புரிந்துகொள்ளமுடிகிறது என்கிறார்.
ஆகவே, தான் அமைதியாக இருக்கப்போவதில்லை என்றும், போரை நிறுத்த தன்னாலான அனைத்தையும் செய்யப்போவதாகவும் கூறுகிறார் அவர்.