கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 950 முறை கருக்கலைப்புகள்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்
கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 950 முறை கருக்கலைப்புகள் செய்த சென்னை மருத்துவர்கள் உட்பட 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
5 பேர் கைது
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து பெற்றோரிடம் கூறுவது என்பது இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் பெங்களூரு பையப்பனஹள்ளி பொலிஸார் நடத்திய அதிரடி ஆய்வின்போது வீரேஷ், சிவ நஞ்சை கவுடா, நவீன் நயன் குமார் ஆகிய 4 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
இவர்கள் நால்வரும் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை கண்டறிந்து பெற்றோரிடம் கூறி பணம் வசூலித்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து அவர்களிடம் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது.
அதிர்ச்சி தகவல்
இதன்படி சென்னையை சேர்ந்த ஒரு மருத்துவர் உட்பட 2 மருத்துவர்கள் மற்றும் 3 மருத்துவ பணியாளர்கள் கருவில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை கண்டறிந்து பெற்றோர்களிடம் கூறி 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் வசூலித்து வந்துள்ளனர்.
மேலும் கருவில் இருக்கும் குழந்தை பெண்குழந்தை என்பது தெரியவந்தால் அதனை கலைப்பதற்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை வசூலித்து வந்துள்ளனர்.
இதற்காக மாண்டியாவில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, வீட்டில் ஸ்கேன் மெஷின் பொருத்தி இந்த முறைகேடுகளை அவர்கள் செய்து வந்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்த கும்பல் 950 கருக்கலைப்புகளை செய்த அதிர்ச்சி தகவலும் விசாரணையில் வெளியாகி உள்ளது.
இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக மருத்துவர் சந்தன் பல்லால், அவரது மனைவி மீனா, லேப் டெக்னீசியன் நிசார், மருத்துவமனை வரவேற்பாளர் ரீஸ்மா, சென்னையை சேர்ந்த மருத்துவர் துளசிராமன் உள்ளிட்ட 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |